கும்பகோணத்தில் வாகனங்களக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைத்து தவெக நிர்வாகிகளை தட்டி கேட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலரின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவுக்கு அமைச்சர் வினோத்தை வரவேற்று நேற்றுமுன்தினம் இரவு தவெகவினர் நால்ரோடு பகுதியில் தஞ்சாவூர்-மயிலாடுதுறை சாலையை இணைக்கும் இடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பேனர்களை குறுக்கே வைத்தனர்.
அப்போது அந்த வழியாக இரவு ரோந்து சென்ற காவலர் தேவநாதன், அவர்களை கண்டித்து சாலையின் குறுக்கே வைத்திருந்த பேனரை அகற்றும்படி கூறினார். அவர்கள் அகற்றாததால் காவலரே பேனரை அகற்ற முயன்றபோது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தவெக வார்டு உறுப்பினர்களான அருண், காளி ஆகிய இருவரும், தேவேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், தவெக நிர்வாகிகள் இருவரும் சேர்ந்து தேவேந்திரனை தாக்கியதில் அவருடைய வலது கையின் மணிக்கட்டு எலும்பு முறிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் தவெக நிர்வாகிகள் அருண் மற்றும் காளி ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து, காயமடைந்த காவலர் தேவேந்திரனை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதில், தலைமறைவாக இருந்த காளி கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான அருண், கும்பகோணம் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து சரணடைந்தார்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தவெக நிர்வாகிகள் காவலரின் கையையே உடைத்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.