திமுகவின் B-டீமில் நான் இல்லை, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1 ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்படும் கொடநாடு விவகாரத்தில் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே. சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் என மூவரும் ஒரே நேரத்தில் திடீரென ஒன்றாக வந்து மரியாதை செலுத்தினர். அது போல் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது “என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சிதான்,” என செங்கோட்டையன் பேசினார். இதையடுத்து TTV. தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து வி.கே. சசிகலாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் வி.கே. சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
இதனையடுத்து, நேற்று சேலத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். நீண்ட ஆலோசனை முடிவில் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக கூறி, ஏற்கனவே கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ” திமுகவின் B-டீமில் நான் இல்லை, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1 ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்படும் கொடநாடு விவகாரத்தில் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
2026-இல் அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்றேன். 2026-இல் அதிமுக தோற்றால் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் நான் பேட்டியளித்தேன். 1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5-ந் தேதி மனம் திறந்து பேசினேன்.
தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.” என செங்கோட்டையன் தெரிவித்தார்.