அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிய நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் ஆலோசனையும் நடத்தியுள்ளார். OPS கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சில முன்னாள் அமைச்சர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா திமுகவை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார்.

வி.கே. சசிகலா கடிதம் எழுதிய அடுத்த நாளே ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அடுத்தடுத்த நாட்களில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசுவேன் எனக் கூறியிருந்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக நிர்வாகிகள் திண்டுக்கலில் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின்படி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கலாம் எனக் கூறப்படுகிறது.