குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தடை செய்யப்பட்டவைகளில் ஒன்று குழந்தை திருமணம் ஆகும். 18 வயது நிறைவு பெறாத பெண்ணும், 21 வயது நிறைவு பெறாத ஆணும் திருமணம் செய்தால், அது சட்டப்படி செல்லாது. அது குழந்தை திருமணமாக பார்க்கப்படும். இதன்படி 18 வயது நிறைவு பெறாத பெண்ணை திருமணம் செய்த ஆணுக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதேபோல் குழந்தை திருமணத்திற்கு துணை போன உறவினர்களுக்கும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வரை கிடைக்கும். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால், காவல்துறை உடனே கடும் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் சமூகத்தில் பல்வேறு இடங்களில் 16 முதல் 18 வயது நிறைவு பெறாத குழந்தைகளை பெற்றோரே திருமணம் செய்து வைக்கிறார்கள். இன்னும் சில மாணவிகள், காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை திருமணம் செய்தாலும், அந்த பெண்ணிடம் அத்துமீறினாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வழிகள் உள்ளது.

இந்நிலையில், தர்மபுரி பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், 16 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அப்போது தான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளதும், அதில் அந்த சிறுமி கர்ப்பமானதும் மருத்துவர்களுக்கு தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சமூக நலத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மருத்துவமனையில் வந்து விசாரித்துவிட்டு, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் வீரம்மாள் சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இதுபற்றி தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுரையின்பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் வீரம்மாளிடம், அந்த சிறுமியின் தாயார் அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் வீரம்மாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.