TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை பற்றி பேசுவதே வேஸ்ட். இவர்கள் மூவருமே திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் TTV. தினகரன், O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பதிலளித்தனர்.
அப்போது TTV. தினகரன் பேசுகையில், துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் எங்கள் எதிரி. துரோகத்தை வீழ்த்தும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றும் ஓயாது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம். மேலும் TTV. தினகரன் பேசுகையில், காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை. சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம் என TTV. தினகரன் தெரிவித்தார். மேலும் செங்கோட்டையன் பேசுகையில், அதிமுகவில் இருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினாலும் மகிழ்ச்சிதான். என்னை நீக்கினால் அடுத்த கட்ட நடவடிக்கையை தெரிவிப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையடுத்து TTV. தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து வி.கே. சசிகலாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சசிகலா சிறிது நேரம் பேசினார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வி.கே. சசிகலா தரையில் அமர்ந்து வழிபாடு செய்தார்.
இந்நிலையில் மதுரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை பற்றி பேசுவதே வேஸ்ட். இவர்கள் மூவருமே திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள். 3 பேரும் இல்லாததால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமடைந்துவிட்டதாக கூறுவது தவறானது. கட்சியில் இருந்து களைகள் நீங்கிவிட்டது. இனி அதிமுக செழித்து ஆட்சி அமைக்கும். அதிமுகவில் இருந்து கொண்டே சில உள்குத்து வேலைகள் செய்ததால் தான், 2021-ஆம் ஆண்டு அதிமுக தோல்வியை அடைந்தது.
செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கனவே அவரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன. அதிமுகவில் யார் துரோகம் செய்தாலும், நடவடிக்கை எடுக்கபப்டும். அதிமுகவை எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் பக்கம் இருப்பது உண்மையாக அதிமுக. செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.