ஜாதிக்கு என்று தனி ரத்தப் பிரிவு வகை இல்லை!” எட்டு வகை ரத்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே. மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ரத்தம் செலுத்தும் போது, அவர் எந்த ஜாதியோ, மதமோ என்பதைக் கவனிக்க மாட்டார்கள். மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளும் ஜாதி பார்க்காமல், பொருத்தம் இருந்தால் யாருக்கும் பொருத்தப்படுகின்றன. ஆனால் ஜாதி அடையாளப் பெருமை பேசுகிறவர்கள், “எனக்கு என் ஜாதிக்காரனின் ரத்தம்தான் வேண்டும்”, “உடல் உறுப்பு என் ஜாதிக்திக்காரரிடமிருந்து மட்டும்தான் வேண்டும்” எனக் கோருவதில்லை!
இந்த நவீன யுகத்திலும் மனிதநேயமற்ற ஜாதி அடிப்படையிலான ஆணவப் படுகொலைகள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது. நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த ஆணவப் படுகொலையில் உயிரிழந்த கவின் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த கடினமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக நாம் ஒட்டுமொத்த சமுதாயமாக எதிர்க்க வேண்டும் என தவெகவில் அக்கா என அழைக்கப்பட்டு வந்த இன்ஸ்டா புகழ் திமுக உறுப்பினர் வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வரும் பட்டாலியன் காவல்துறையில் சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் – கிருஷ்ணகுமாரி தம்பதி இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், சுபாஷினி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக சரவணக்குமார்- கிருஷ்ணகுமாரி தம்பதி திருநெல்வேலியில் இருந்த போது, சுபாஷினி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் செல்வகணேஷ் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது சுபாஷினியை சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷினி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் உள்ள டெஸ் 37 நிறுவனத்தில் பணியாற்றிய பி.இ. பட்டதாரி கவின் செல்வகணேஷ், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே கவின் செல்வகணேஷை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி நெஞ்சை பதறவைக்கிறது.
கவின் செல்வகணேஷின் தாயார் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த, அரசுப் பள்ளி ஆசிரியர் தமிழ் செல்வி எழுதிய எழுத்துப்பூர்வ புகாரின்படி, சுர்ஜித்தின் பெற்றோரின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவினின் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும், அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முக்காணி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள், சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, மூன்று மணி நேரமாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.கவினின் உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் செல்வகணேஷின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பையும், சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாரிகள் வன்கொடுமை பாதிப்பு முதற்கட்ட நிதியை கொண்டு சென்று கவின் செல்வகணேஷின் தந்தை சந்திரசேகரிடம் கொடுக்க சென்றபோது தனக்கு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி நிதியை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.
“ஏன்டா, என் பையை ஒளிச்சு வச்ச?” என்பது விளையாட்டுப் பருவத்தைத் தாண்டாத மாணவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் மிகச் சாதாரணமான கேள்வி. இக்கேள்வியால் கேள்விக்குள்ளானவனின் கௌரவம் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடப் போவதில்லை. ஆனால், இங்கோ கேள்வி கேட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஜாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஒருவன் பென்சில் டப்பாவிலிருந்து பிளேடை எடுத்து சரவணக்குமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து ஓடிய சம்பவத்தை தமிழகம் பார்த்ததே. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் அலங்காநல்லூர் அருகிலுள்ள மறவப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவனுக்கு கடந்த 2019 -ஆம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த சம்பவத்தை தமிழகம் கடந்து வந்த பாதையாகும்.
ஆதிக்க ஜாதியினரின் எந்தவொரு செயலையும் தாழ்த்தப்பட்டவர்கள் கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதுதான் இத்தாக்குதல் உணர்த்தும் செய்தி. ஆதிக்க ஜாதியினரின் முகம் சுளித்துவிடாதபடி, மனம் கோணாதபடி தாழ்த்தப்பட்டோர் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிர்த்தோ, கண்டித்தோ சுண்டுவிரலைக்கூட அசைத்துவிடக் கூடாதென்றால், தாழ்த்தப்பட்டோர் சுயமரியாதையற்ற சதைப் பிண்டங்களாகத்தான் வாழ வேண்டும் என்பதே இந்த ஆதிக்க ஜாதியினரின் எண்ணம்.
மேலும் மாணவப் பருவத்திலேயே நஞ்சாக ஊட்டப்படும் சாதி வெறியால் தென்மாவட்ட பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் மேசைகள் ஒவ்வொன்றும் சாதிவாரியாக பிரிந்து கிடக்கும். தங்கள் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாணவரும் கைகளில் குறிப்பிட்ட வண்ணங்களில் அடையாளக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.
கல்வித் துறை இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் ஜாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018-ம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டு உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகுத்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமென ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.
அப்போது கொதித்தெழுந்த பாஜகவின் தேசியச் செயலர் எச். ராஜா, “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், அப்போது பதறியடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது மேலும், சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வராத காரணத்தால் தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவித்தார். அமைச்சர் பாரதிய ஜனதாவிடம் சரணடைந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் சில நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களிடம் இதைக் குறித்து பேசிய கே.ஏ. செங்கோட்டையன், தமிழக பள்ளிகளில் சாதிப் பிரச்சினையே இல்லை எனவும், இருந்தால் காட்டுங்கள் என கேள்வி எழுப்பியதையும் தமிழகம் கடந்து தான் வந்துள்ளது.
‘’இப்பல்லாம் யாரு ஜாதி பாக்குறா?’’ என்ற ‘’பொது நம்பிக்கைக்கு’’ மாறாக, ஜாதி அமைப்பு இந்தியா, இந்து மதம், கடந்து, தெற்காசியா முவழுதும், அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் மத்தியிலும், அனைத்து மதங்களிலும் இயங்கும் வன்முறையுடன் கூடிய ஒடுக்குமுறைச் சமூக அமைப்பாகும். ஜாதிய பாரபட்சங்கள் காரணமாக காலம் காலமாக மக்கள் மண்டையில் புரையோடி போய் உள்ள சாதி பெருமையின் காரணமாக இந்த கொலை ஜாதி பெருமையை நிலை நாட்ட நடந்துள்ள கொலை என்ற செய்தியை கேட்கும் போது, கவின் செல்வகணேஷ் பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் வாங்கி என்ன பயன்.
மேலும் மாதம் இரண்டு லட்சம் பணம் சம்பளம் வாங்குவதால் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ, நாட்டிற்கோ என்ன பிரோஜனம். இவன் சம்பாதித்த பணமும், படித்த கல்வியும், ஜாதிக்கு முன்னால் மயிருக்கு சமம் என்ற ரீதியில் அவமானப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் பட்டபகலில் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டு இருப்பது இந்த தமிழுனுக்கும், இந்த பாரத மண்ணிற்க்கும் எவ்வளவு பெரிய அவமானம். ஜாதி ஆணவ கொலையின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த மண்ணில் வாழ்வதா அல்லது சாவதா என்பதை நினைவூட்டுகிறது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. இது இளவரசன் முதல் சங்கர் வரை, ஜலாவரின் பழங்குடி குழந்தைகள் முதல் தூத்துக்குடி கவின் வரை குறிவைக்கப்பட்ட கொலைகளின் ஒரு வடிவமாகும்.