தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று அவை கூடிய நிலையில், மேகதாது அணை குறித்து விவாதங்கள் வெடித்தன. இதற்கிடையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “கடந்த 3-4 ஆண்டுகளாக இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. ஆளுநரை எதிர்த்தீர்கள், அவர் வெளிநடப்பு செய்திருந்தார்” என்று கூறியிருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
உடனே குறுக்கீடு செய்த சபாநாயகர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்று கூறி, அமைச்சரின் பேச்சை திருத்தினார். அப்போது, ஆளுநர் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது இல்லை என்று பேசினார். அவரது பேச்சு சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, தவெக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது என்றும், குற்றச் செயல்களில் தவெகவினர் ஈடுபடுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தனர்.

இது குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவினர் கூட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். 2 வயது குழந்தையை கூட திமுகவை சேர்ந்தவர் வன்கொடுமை செய்திருக்கிறார் என பேசியபோது, உடனே குறுக்கிட்ட சபாநாயகர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேச கூடாது என்றும், ஆதாரத்துடன் பேச வேண்டும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.