அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைத்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறீகள். அதிமுகவை அழிக்க நினைக்கிறீர்கள். உங்கள் ஆணவம், அகம்பாவம் பேச்சு மூலம் தெரியுது தம்பி. அதிமுகவின் சிங்கக்கூட்டம் சிலிர்த்து எழுந்து, உங்களை செதில், செதிலாக்கும் காலத்தை உருவாக்குவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சபதம்.
1952-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த எம்ஜிஆர். தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார். மேலும் எம்ஜிஆர் காங்கிரஸை வீழ்த்த திமுகவில் இருந்தபோது பல சமூக சிந்தனை கொண்ட படங்களில் நடித்தார்.

சமூகத்தின் சில நச்சுக் கிருமிகள். நயவஞ்சகர்கள் மறைந்து இருக்கின்றார்கள். அவர்களால், அவர்களின் செயல்களால் இந்த நாட்டில் வெக்கபடத்தக்க வேதனையான சம்பவங்கள் நிகழ்கின்றன. நீதிக்காக, நேர்மைக்காக, ஜாதிவெறி கூடாது என்பதற்காக, ஏழை, பணக்காரன் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக, சமூகத்தில் அநீதி இழைக்கப்பட கூடாது என்பதற்காக போராடினார். நாட்டு மக்களின் நல்வாழ்க்கைக்காக, நாட்டு மக்களின் உயர்வுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டங்களை மேற்கொண்டார். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கதாநாயகனும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்கு போராடுகிறான்.

நான் ஆணையிட்டால்… அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்… உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை. அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்… என்ற புரட்சிகர பாடலை பாடி உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடும் புரட்சிகரமான கருத்துக்களை விதைத்த எங்க வீட்டுப் பிள்ளை. அங்கே சிரிப்பவர்கள்.. சிரிக்கட்டும்… அது ஆணவ சிரிப்பு… பாடலை பாடி எளிய தொழிலாளியின் வாழ்க்கை, அவர்களின் உரிமைகளை பேசிய ரிக்ஷாக்காரன்.

தரை மேல் பிறக்க வைத்தான்… எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்… கரை மேல் இருக்க வைத்தான்… பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்… பாடலை பாடி மீனவர்களின் ஒற்றுமை, சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படகோட்டி என பல சமூக சிந்தனை கொண்ட படங்களில் நடித்தார்.

புத்தன் ஏசு காந்தி…பிறந்தது பூமியில் எதற்காக… தோழா ஏழை நமக்காக… பாடலை பாடி ஊடகங்களின் பொறுப்புணர்வு, செய்தித்துறையின் நெறிமுறைகள் போன்ற அம்சங்களை கொண்டு செய்தியாளராக சந்திரோதயம். உயர்ந்தவர் என்ன.. தாழ்ந்தவர் என்ன.. உடல் மட்டுமே கருப்பு… அவர் உதிரம் என்றும் சிவப்பு … போன்ற சமூக சிந்தனை கொண்ட பாடல்கள் மேலும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே… பாடலை பாடி ஏழை எளியவர்களுக்கு உதவ ஒரு நேர்மையான அரசு அலுவலக நாம் நாடு.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே… தன்னாலே வெளி வரும் தயங்காதே… தலைவன் இருக்கிறான் மயங்காதே…. பாடலை பாடி மனிதர்களுக்குத் தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் வகையில் பணத்தோட்டம் போன்ற சமூக சிந்தனை கொண்ட படங்களில் நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான படமாக உருவாக்கப்பட்ட படங்களில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்து நடிதத்தன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரினால் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தனர்.

இதன் விளைவு, இந்தியாவின் நான்காவது நாடாளுமன்றத்திற்கும் மெட்ராஸ் மாநிலத்திற்கும் 1967 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்திற்கு 36 இடங்களும் சட்டமன்றத்திற்கு 179 இடங்களை வென்று காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியது. அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 1969 – ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி மறைவுக்குப் பின், திமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக 1972-ல் எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வெளியேற்றப்பட்டதன் விளைவு 1972- ஆம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.

1973-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கே. மாயத் தேவர் பெற்ற வெற்றி மற்றும் ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சி. அரங்கநாயகம் பெற்ற வெற்றி அதிமுகவின் முதல் வெற்றியாகும். மேலும் 1973- ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி அதிமுக, 11 சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் 3-வது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 1976 வாக்கில், திமுக, 16 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது.

அதன்பின்னர் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க 1977-ஆம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக எம்ஜிஆர் பதவியேற்றார். அடுத்து தமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தலில் 1980 -ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எம்ஜிஆர் இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதலமைச்சரானார். அதன் பின்னர் 1984-ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தல் 1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது.
அதில் தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் அதிமுக வெற்றி பெற எம்ஜிஆர் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சரானார். 1977- 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி தனது 70-வது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் உருவான வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்காலிக ஏற்பாடாக நெடுஞ்செழியனிடம் ஆட்சிப் பொறுப்புகள் தரப்பட்டன. தனது அரசியல் வாரிசு என்று எவரையும் ஒருபோதும் சுட்டிக்காட்டியதில்லை. ஆகவே, எம்ஜிஆர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமர அதிமுகவில் உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுக எம்எல்ஏக்கள் இருகூறுகளாகக் பிரிந்து கிடந்தனர். அதிமுகவின் மொத்த எம்எல்ஏக்களே 131 தான். தலைகளை எண்ணிப்பார்த்தபோது ஜானகி கையே ஓங்கியிருந்தது. விளைவு, ஜானகி முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் கைகொடுக்க வேண்டும். ஆனால், அன்று காங்கிரஸோ கண்மூடி நின்றது. “ஜானகி அரசை ஆதரிக்கிறோம் என்று சொல்லுங்கள்… ஆட்சி தொடரட்டும். பிறகு, ஜானகி கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம்” என்று இராஜீவ் காந்திக்கு சோ ராமசாமி ஆலோசனை கொடுத்தார் . ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே எங்கள் ஆதரவு என்று இராஜீவ் காந்தி சொல்லிவிட்டார்.

சாட்சிக்காரனுக்குப் பதில் சண்டைக் காரனுடன் கைகுலுக்கி கொள்ளலாம் என்று ஜானகி அவர்களுக்காக ஆர் எம் வீரப்பன் தூது போனார். திமுகவின் ஆதரவை ஆர் எம் வீரப்பன் கோர கருணாநிதி முடியாது என்று மறுத்துவிட்டார். அதன்பின்னர் என்ன ஆனாலும் சரியென்று சட்டமன்றத்தில் ஜானகி நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது, சட்டமன்றத்தில் காவலர்கள் நுழைந்து தடுக்கும் அளவுக்கு வன்முறை வெடித்தது. என்றாலும், ஜானகி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றக் கலவரத்தைக் காரணம் காட்டி, ராஜீவ்காந்தி ஆட்சியைக் கலைத்தார்.
அதிமுக ஜெ பிரிவின் ஜெயலலிதா பொதுச் செயலாளரானார். அப்போதே அவருக்குப் ‘புரட்சித் தலைவி’ பட்டம் கொடுத்தது பொதுக் குழு. இரட்டை இலைச் சின்னத்துக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் இரு பிரிவினருமே உரிமை கோரினர். அதனை தொடர்ந்து 17 டிசம்பர் 1988-ல் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது.
தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. அந்த தேர்தலில் ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் மட்டும் வென்ற நிலையில் அதிமுக ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைக்க திமுக கூட்டணி 170 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார்.

இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு.. எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு… உண்மை என்பது என்றும் உள்ளது… என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை போல அதிமுக பிரிந்துகிடந்தால் லாபமில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்த ஜானகி பொதுவாழ்விலிருந்து விலகினார். பிறகு, ஜானகி அணி, ஜெயலலிதா அணி ஆகிய இருபிரிவுகளும் ஒன்றிணைந்தன. ஜெயலலிதா ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராக மீண்டும் இரட்டை இலை கிடைத்தது.
அதனை தொடர்ந்து 1991-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாட்டின் 10-வது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் கண்டது. அந்த தேர்தலில் போது சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ஆம் ஆண்டு மே 21-ந் தேதி இரவு 10:10 மணியளவில் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் விளைவு 225 தொகுதிகளில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. 1991 ஜூலை 24-ந் தேதி ஜெயலலிதா முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது ஜெயலலிதா காலில் கே. செங்கோட்டையன் விழு, அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் அரசியலில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது.
மேலும் 2001-ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாட்டின் 12-வது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் 175 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று, 132 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அடுத்து 15-வது மற்றும் 16-வது சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் போலவே ஜெயலலிதா தொடர் வெற்றிகளை பெற்று ஆட்சி அமைத்தார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக என்ற கட்சியே இருக்காது என பலர் கணித்த போதிலும், ஜெயலலிதாவின் உறுதியான செயல்பட்டால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அதிமுக என்ற ‘எஃகு கோட்டையை’ நூறு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத வகையில் மாநிலத்தின் சக்திவாய்ந்த பேரியக்கமாக மாறியது. ஆனால், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இரவு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிரக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. பின்னர், தொடர் சிகிச்சையில் இருந்த அவர் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். ஜெயலலிதா மறைந்த பிறகு டிசம்பர் 29-ந் தேதி சென்னை வானரகத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் 31-ந் தேதி இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது “புரட்சித் தாய்” எனவும் “சின்னம்மா” என வி.கே. சசிகலாவை ஆதரவாளர்கள் அழைத்தனர். ஆனால் மறுபுறம் சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பை மையமாக வைத்து பன்னீர்செல்வம் அவர்களை 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி ராஜினாமா செய்ய வைத்து பிப்ரவரி 15-ந் தேதி எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராகவும் டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராகவும் நியமித்து பெங்களூரு சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதியிடம் வி.கே. சசிகலா சரணடைந்தார்.

அதன் பின்னர் அதிமுக பல பிரிவுகளாக இன்று பிரிந்து கிடப்பது மட்டுமின்றி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவில் இருந்து திமுக மற்றும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் நான்கு எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் K.A.S. மகேந்திரன், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிமுக தொண்டனின் மனநிலை படம் போட்டு காட்டுகிறது.

எத்தனை பெரிய மனிதனுக்கு… எத்தனை சிறிய மனம் இருக்கு… என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை போல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் ‘எஃகு கோட்டையாக மாநிலத்தின் சக்திவாய்ந்த பேரியக்கமாக மாறிய அதிமுகவை இன்று தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர், அதிமுக மற்றும் அதன் உறுப்பினர்களை “அல்லு சில்லு” என்றும் “தீர்ந்து போன சக்தி” என்றும் விமர்சிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
நல்ல தீர்ப்பை… உலகம் சொல்லும்… நாள் வரும் போது… அன்று சிரிப்பது யார்… அழுவது யார்… தெரியும் அப்போது… என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை போல தவெகவினால் இன்று சிதைந்து கிடைக்கும் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து அதிமுகவை எஃகு கோட்டையாக மாறுமா..!? என்பதே காலம்தான் நமக்கு பதில் சொல்லும்.