ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு…நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு… என்ற MGR அவர்களின் பாடல் வரிகளைப் போல அதிமுக பிரிந்தவர்காளை இணைக்க வேண்டும், பழைய வலிமையை பெற வேண்டும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன் அவர்கள் கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என்று சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பதவியில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதங்களை எடப்பாடி பழனிசாமிக்கு தனித்தனியாக அனுப்பி வைத்துள்ளனர்.
அன்பே வா படத்தில் “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்கிற வரிகள் அன்றைய காங்கிரசு அரசு தணிக்கை செய்து புதிய சூரியன் என்று வெளியிட்டாலும் எம்ஜிஆர் நடிக்கும் படங்களில் உதயசூரியன் என்கிற பெயர் வருமாறு பார்த்துக் கொள்வது மட்டுமின்றி திமுகவின் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் திரைப்படங்கள் உதவியாக இருந்தன.

எம்ஜிஆரால் திமுக வளர்ந்த்தா? திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் “முகம் காட்டு ராமச்சந்திரா முப்பது இலட்சம் வாக்குகள் திமுகவிற்கு” என்று அண்ணா சொல்லும் அளவிற்கு எம்ஜிஆர் மக்களை வசீகரமாக கவர்ந்து இழுத்தார். 1972 ம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவிக்க காங்கிரசுதான் காரணம் என்கிற பார்வையில் அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம் செய்வார்கள். மேலும் எம்.ஜி.ஆர். காலத்திலேயே மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராக இரட்டை தலைமை முறை இருந்தது மட்டுமின்றி எம்ஜிஆரின் மனசாட்சி, வலது கரம் என அரசியலில் கொடி கட்டி உச்சத்தில் ஆர்.எம். வீரப்பன் பறந்தவர்.
1987-ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த போது அதிமுக 131 எம்எல்ஏக்கள் இருகூறுகளாகக் பிரிந்து கிடந்தனர். ஆர்.எம். வீரப்பன் எம்எல்ஏக்கள் தலைகளை எண்ணிப்பார்த்தபோது ஜானகி கையே ஓங்கியிருக்க ஜானகி முதல்வரானார். ஆனால் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே எங்கள் ஆதரவு என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டார். அப்போது சாட்சிக்காரனுக்குப் பதில் சண்டைக் காரனுடன் கைகுலுக்க ஆர்.எம். வீரப்பன் தயாரானார் திமுகவின் ஆதரவைக் கோர கருணாநிதி மறுத்துவிட்டார். என்ன ஆனாலும் சரியென்று சட்டமன்றத்தில் ஜானகி நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது, சட்டமன்றத்தில் காவலர்கள் நுழைந்து தடுக்கும் அளவுக்கு வன்முறை வெடித்தது. ஜானகி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றக் கலவரத்தைக் காரணம் காட்டி, ஆட்சியை ராஜீவ் காந்தி கலைத்தார்.
17 டிசம்பர் 1988-ல் இரட்டை இலையை முடக்க பட்டு ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னத்திலும் ஜானகிக்கு ஜோடிப் புறா சின்னத்திலும் போட்டியிட ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைக்க ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். பிரிந்துகிடந்தால் லாபமில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்த ஜானகி பொதுவாழ்விலிருந்து விலக இருபிரிவுகளும் ஒன்றிணைந்தன. ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. இரட்டை இலை மீண்டும் கிடைக்க “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பாணியில் ஆர்.எம். வீரப்பன் அவர்களை ஜெயலலிதா தமது தலைமையிலான அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் .

அப்போதைய முதல்வர் கருணாநிதி 1989 மார்ச் 25 -ந் தேதி பட்ஜெட்டைப் படிக்க எழுந்தபோது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது நடந்த களேபரத்தில் முதலமைச்சர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி உடைந்ததாகவும் ஜெயலலிதாவின் சேலை இழுத்துக் கிழிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. தலைவிரிகோலமாக சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா இனி இந்த அரசியல் வேண்டாம் என முடிவு செய்தபோது வி.கே. சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் ஜெயலலிதா துணையாக நின்றனர்.
எம்.ஜி.ஆருக்கு நாவலர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் ஆர்.எம். வீரப்பன் இருந்ததை போல வி.கே. சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் ஜெயலலிதா துணையாக நின்று அதிமுக ஒரு எஃகு கோட்டை இதை அசைக்கமுடியாது என்று சொல்லும் அளவிற்கு கட்டி எழுப்பினர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அன்வர் ராஜா திமுகவில் சேர வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் கே. சி. பழனிசாமி என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

எம்ஜிஆரை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை; நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு என்ற வாசகம் மூலம் பிரபலமான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்த . கே.ஏ.செங்கோட்டையன் என்ற இளைஞரை, எம்ஜிஆர் என்ற காந்தம் ஈர்த்துக் கொள்ள அதிமுகவில் 1972-ல் அரசியல் பயணம் தொடங்கி அதிமுக வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாய் மாறி நிற்கிறார்.
1996-ல் அதிமுக தோல்வியைத் தழுவியபோது, வழக்குகளுக்கு பயந்து கட்சியை விட்டு பலரும் ஓடிய போதும், ஜெயலலிதாவை விட்டு ஓடாதவர். ‘நானே நேரடியாக அழைத்தாலும், திமுகவுக்கு வரமாட்டார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி, செங்கோட்டையன் குறித்து கூறியதாக ஒரு தகவலும் உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமையை கைப்பற்ற ராஜதந்திரங்களை பலரும் பிரயோகிக்க, கட்சி நலன் பெரிது என்று அமைதியாய் காத்திருந்தார் செங்கோட்டையன். தலைமை ஏற்கும் வாய்ப்பு தனக்கு வந்த நிலையில், பெருந்தன்மையுடன் அதை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தவர் செங்கோட்டையன் என்று அப்போது நடந்த சம்பவத்துக்கு ஆதார குரலை டிடிவி தினகரன் இப்போதும் வெளிப்படுத்தி வருகிறார்.

ஏன் என்ற கேள்வி -இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் – கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை என்ற MGR அவர்களின் பாடல் வரிகளைப் போல செங்கோட்டையன் அடுத்த கட்ட நகர்வுகளை நகர்த்த கூடும். எது எப்படியோ எடப்பாடி பழனிசாமியின் அகங்காரத்தில் வீழப் போவது: அதிமுகவா..!? எடப்பாடியா..!? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.