கூட்டுறவு வங்கியில் அடகு வைக்க வந்த விவசாயிகளிடம் 12 பவுன் நகைகளை பெற்று, பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த கூட்டுறவு வங்கியின் செயலாளர், எழுத்தர் ஆகியோர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தை அடுத்த தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நல்லையன், வைரக்கண்ணு மற்றும் முருகேசன் ஆகிய மூவரும் 2023-ஆம் ஆண்டு தளிகைவிடுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தங்களின் நகைகளை அடகு வைக்க தனித்தனியாக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த வங்கிச் செயலாளர் செல்வராஜ், எழுத்தர் பழனியப்பன் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து 12 பவுன் நகைகளை அடகுவைக்க பெற்றுக் கொண்டு, மறுநாள் வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி, விவசாயிகள் நல்லையன், வைரக்கண்ணு மற்றும் முருகேசன் ஆகிய 3 பேரும் மறுநாள் சென்று பணத்தை கேட்டபோது, அலுவலர்கள் பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், செல்வராஜ், பழனியப்பன் ஆகியோர் மீது துறைரீதியாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், புகாரின் பேரில் திருவோணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் செல்வராஜ், பழனியப்பன் ஆகியோர் விவசாயிகளிடம் நகைகளைப் பெற்று, தனியார் அடகுக் கடைகளில் அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கூட்டுறவு வங்கியின் செயலாளர் செல்வராஜ் மற்றும் எழுத்தர் பழனியப்பன் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.