பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று நடைபெறும் வன்னியர் சங்கத்தின் பிரம்மாண்டமாக மகளிர் மாநாட்டு முகப்பில் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் புகைப்படம் பெரிய அளவில் இடம் பெற்று தமிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த மாநாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும், பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும், போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன.

இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், “10.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது. எனவே தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை உடனடியாக கொடுக்க வேண்டும். என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% ஒதுக்கீட்டை அளித்தார். சாதி வாரி கணக்கெடுப்பது நடத்துவதற்கு முதல்வருக்கு என்ன தயக்கம்? அவர் தந்தையை மிஞ்சிய தனையாக இருக்க வேண்டும். அவர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் அவர்களே, தமிழ்நாட்டில் நிலவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க ஆட்சியை மூன்று மாதங்களுக்கு எங்களிடம் கொடுங்கள் என்று நாங்கள் கேட்க போவதில்லை.
ஆனால் 10 அதிகாரிகளை எங்களிடம் அனுப்பி வையுங்கள். நாங்கள் அவர்களுக்கு போதை கலாச்சாரத்தை ஒழிப்பது பற்றிய யோசனைகளை தெரிவிக்கிறோம். அவர்கள் உங்களிடம் அதை கூறுவார்கள். நீங்கள் நடைமுறைப்படுத்தி பாருங்கள் நிச்சயமாக தமிழ்நாட்டில் போதை ஒழிக்கப்படும். இதற்காக நாங்கள் ஆட்சியில் வந்துதான் அதை ஒழிக்க வேண்டும் என்று இல்லை. உங்களாலேயே இதை ஒழித்து விட முடியும்.

சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். அப்போது அவர் தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்பதற்காக சிறு உதாரணத்தை கூறியிருந்தார். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் பெருமை குன்றிவிடக்கூடாது என்பதற்காக தனயனான ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை பெரிய கோயிலை விட உயர் குறைவாக கோயிலை கட்டியிருந்தார்” என்று பேசியிருந்தார் என மேடையில் ராமதாஸ் பேசினார்.