குஜராத் மாநிலம் பாலன்பூரில் உள்ள கணேஷ்புராவைச் சேர்ந்த நிகேஷ் படேல். இவர், கடந்த 19-ந் தேதி தனது மனைவியை காணவில்லை என்று பாலன்பூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிக்னேஷ் காமித்தின் நேரடி மேற்பார்வையின் நடைபெற்ற விசாரணையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண்ணை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. பெண்ணின் கணவர் நிகேஷ் திருமணத்துக்குப் பின் மனைவியை தனக்கு பிடிக்காததால் அவருடன் விலகியே இருந்ததுள்ளார். ஒரு கட்டத்தில் கட்டிய மனைவியை வீட்டை விட்டு அடித்து துரத்த திட்டமிட்டுள்ளார்.

அப்போது தான் தனது மனைவியை நண்பர்கள் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்காக நண்பர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி வாங்கியுள்ளார். தொடர்ந்து நிகேஷின் நண்பர்கள் அவரின் மனைவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் அவரை ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். அங்கு இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 10 நாட்களுக்கு மேலாக 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் சிந்தியுள்ளார்.
பின்னர், மனைவி காணவில்லை எனக் கூறி நாடகமாடிய கணவன் நிகேஷ் படேலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பெண்ணை கடத்தி சித்ரவதை செய்த சஞ்சய், அசோக், சச்சின் தர்பார் உட்பட மேலும் 6 பேரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கட்டிய மனைவியை 50 ஆயிரம் ரூபாய்க்கு கணவனே தனது நண்பர்களிடம் விற்பனை செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.