திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து, புளியம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் பேபி. இவர் தற்போது காவல்துறையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து பணிபுரிந்து வருகிறார். இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த காவலர் வீரமணி என்பவரும் 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப். 1-ந் தேதி வீரமணி வேறு ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பேபி, ஏப். 14-ந் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்து, திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) குமரேசன் தலைமையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காவலர் பேபி கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த போது அதே கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினத்தை சேர்ந்த காவலர் வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு பேபிக்கு வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வந்த நிலையில் வீரமணி அவருடன் பேசுவது குறைந்துள்ளது. தொடர்ந்து பேபி அவரை தொடர்புகொள்ள நினைத்தாலும் அவர் போன் எடுக்காமல் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் காவலர் வீரமணி கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
வீரமணி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த பேபி அவரிடம் நேரில் சென்று கேட்ட போதும் எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்துள்ளார். இதனால் வீரமணி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதை உணர்ந்த காவலர் பேபி வேலைக்கு செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். காவலர் பேபி வீட்டில் யாருமில்லாத நேரமாக பார்த்து தற்கொலைக்கு முயற்சி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து காவலர் வீரமணி மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.