சென்னை மருத்துவரிடம் பத்திர பதிவுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், ஏஜென்ட் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.

அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் மருத்துவர் ஹாலிக் அலாவுதீன். இவர் ராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர் . இவர், ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் 1 ஏக்கர் 98 சென்ட் நிலத்தை தாயார் பெயரில் ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வந்துள்ளார். பதிவு செய்வதற்கு ஹாலிக் அலாவுதீனிடம் ரூ.50 லட்சத்தை சார்பதிவாளர் ராமநாதன் கேட்டுள்ளார்.

இதனையடுத்து ஹாலிக் அலாவுதீன், ராமநாதன் வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து சார்பதிவாளரின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த அயூப்கான் என்பவரிடமும் முதல் கட்டமாக ரூ.17 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளார். இதன் பிறகு மீதமுள்ள பணத்தை தந்தால்தான் பத்திரம் பதிவு செய்யப்படும் என சார்பதிவாளர் ராமநாதன் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் பேரம் பேசி இறுதியாக ரூ.15 லட்சம் கேட்டு, அதில் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.12 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த ராமநாதன் கூறியுள்ளார்.
இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதனுக்கு பாடம் புகட்ட நினைத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 3 லட்சம் ரூபாய் நோட்டுகளை ஹாலிக் அலாவுதீன் நேற்று (வியாழக்கிழமை) வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ராமநாதனிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ராமநாதனை பிடித்து கைது செய்தனர். மேலும், உடந்தையாக இருந்த ஏஜென்ட் அயூப் கான் என்பவரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.