கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் – அனிஷா தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். மகேஷ் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி அனிஷா குலசேகரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனிஷா வேலைக்குச் சென்று வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் சங்கர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அனிஷா தனது கணவர் மகேஷிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அப்போது, வெளிநாட்டில் இருந்த மகேஷ், “நான் ஊருக்கு வந்த பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம். கவலைப்பட வேண்டாம்” என்று தனது மனைவிக்கு ஆறுதல் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சங்கர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் நிலையில், மனவேதனை அடைந்த அனிஷா, தனது கணவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “அவன் என்னை வாழ விட மாட்டான். குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அனிஷா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்றும் பல நாட்கள் கடந்தும், தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மகேஷ் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, வழக்கை தீவிரமாக விசாரித்த குலசேகரம் காவல்துறையினர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் தவெக பிரமுகர் சங்கரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சங்கரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.