அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளம். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று ஈரோட்டில், திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் குறித்து எல்லாம் பேச மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜக – அதிமுக தேசிய ஐனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஜனநாயகத்தின் குரல்வலை தொடர்ந்து நெரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடிய பூரண சந்திரன் தனது உடலில் தீயை பற்றி உயிர் நீத்துள்ளர். இதற்கு தமிழ்நாடு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் அவசியம் பதில் சொல்லியாக வேண்டும்.
தங்களின் உரிமைகளுக்காக தூய்மைப் பணியாளர்களை கைது செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை இல்லை. அது ஈகோவால் எழுந்துள்ள பிரச்சனையாம். திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது மிகவும் தவறான செயல். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. கடவுள் முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக எல்லாம் சிலர் பேசுகின்றனர்.
நான் ஒரு பெண் அரசியல்வாதி, அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து எல்லாம் நான் பேச முடியாது. எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலின் அரசு மக்கள் முன் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
தவெக தலைவர் விஜய் ஈரோட்டை மஞ்சள் நகரம் என்ற கூறியுள்ளார். அந்த மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய பாஜக அரசு. எனவே மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் தன்னுடைய 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறுகிறார். அப்படி பார்த்தால் 25 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவை செய்து வரும் எங்களுக்கு மக்களுடன் எந்தளவு தொடர்பு இருக்கும் என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் விஜய் தான் களத்தில் இல்லை. திடீரென வருகிறார். திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் தன்னை தான் களத்திற்கு சம்மந்தமில்லாதவர் என சொல்லியுள்ளார் என நினைக்கிறேன். இந்தியாவில் பாஜக பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. உலகின் சிறந்த பி்ரதமராக நநேந்திர மோடி உள்ளார். எனவே அவர் கூறுவது எங்களுக்கு பொருந்தாது. மகாத்மா காந்தியை திமுக உரிய முறையில் கொண்டாடவில்லை. அவர்கள் அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. மகாத்மா காந்தி ஊழலற்றவர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்தது நம் தமிழகத்தில்தான். காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, பிற்போக்கு இயக்கங்கள் என்று சொல்ல வேண்டும். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளம். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தில் தப்பக்க முடியாது. இது ஏதோ தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை. அவை எப்போதும் தொடரும் நடைமுறை. உதயநிதிக்கு இது எல்லாம் புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. அவருக்கு எழுதித் கொடுப்பவர்கள் எதுகை, மோனையில் எழுதித் தருகிறார்கள். திமுக ஆட்சியில் கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர். அதற்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாமே. தீய சக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன். ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு.”என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.