வயதை பயன்படுத்தி சிலர் ராமதாஸை தவறாக வழி நடத்துவதாகவும், ஒரு குழந்தை போல அவர் இருப்பதாகவும், அவரை மூன்று பேர் தவறாக வழி நடத்துவதாக சுட்டிக்காட்டி நிலையில் யார் அந்த மூன்று பேர் என்ற கேள்வி பாமக நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியை வலுவாக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சேர்ந்திருக்கும் நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் பாமக உட்கட்சி விவகாரங்களால் தொண்டர்கள் நிர்வாகிகள் இடையே கடும் குழப்பம் நிலவுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவரை செயல் தலைவராக நியமிப்பதாக கூறினார். ஆனால் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். அதற்கு பிறகு நடந்த பல்வேறு பாமக நிகழ்வுகளில் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து அதிரடியாக அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பாமக நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வயதை பயன்படுத்தி சிலர் ராமதாஸை தவறாக வழி நடத்துவதாகவும், ஒரு குழந்தை போல அவர் செயல்படுவதாக கூறியிருந்தார். மேலும் மூன்று பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ் இருப்பதாகவும் பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் முதன்முறையாக மூன்று பேரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். யார் அந்த மூன்று பேர்? என்ற கேள்வி பாமக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.