சென்னை, திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் மற்றும் தங்க நகை அடகு நிறுவனத்தில் பகுதி மேலாளராக பணிபுரிந்து வருபவர் அரவிந்த். இந்த நிறுவனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மணலி புதுநகரைச் சேர்ந்த காயத்ரி, என்பவர் பிரவீன்குமாரிடம் குரோம்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வேறொரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ள 411 கிராம் நகைகளை மீட்டு திருவொற்றியூரில் உள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைத்துக்கொள்ளுமாறு கூறி அடகு வைத்த ரசீதை கொடுத்தார்.
அதன்பேரில் பிரவீன்குமார் அடகு ரசீது மற்றும் காயத்ரியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, நிதி நிறுவனத்தில் உத்தரவு பெற்று ரூ.44.67 லட்சத்தை காயத்ரி கூறிய தனியார் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் காயத்ரி தான் கூறியது போல் தங்க நகைகளை நிதி நிறுவனத்திற்கு கொண்டு வராமல் ஏமாற்றினார். இதையடுத்து, அவரது வீட்டு முகவரியை தேடி சென்றபோது, காயத்ரி தலைமறைவானது தெரியவந்தது.

இதுகுறித்து, அரவிந்த் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கிளை மேலாளர் பிரவீன்குமார் மற்றும் காயத்ரி ஆகியோர் கூட்டு சதி செய்து, திருவொற்றியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பணத்தை காயத்ரி தனக்கு வேண்டிய தனியார் வங்கிக்கு அனுப்பி வைத்து, பின்னர் அப்பணத்தை ராதாகிருஷ்ணன் என்பவரது வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை அபகரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் பணமோசடியில் ஈடுபட்ட கிளை மேலாளர் பிரவீன் குமார், காயத்ரி ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், காயத்ரி மீது ஏற்கனவே, புது வண்ணாரப்பேட்டையில் இதேபோல் ஒரு மோசடியில் ஈடுபட்ட வழக்கு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.