தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அடுத்த தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் நேற்று (அக்டோபர் 26) இரவு நேரத்தில் ஒரே பிளாக்கில் மதுரை மற்றும் தேனி பகுதியை சேர்ந்த வழிப்பறி, செயின் பறிப்பு , திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு 17 கைதிகள் தங்கி இருந்த கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் பணியில் இருந்த காவலர் என்னவென்று விசாரித்துள்ளார்.
அப்போது அந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்துள்ளதாகவும், சீக்கிரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கைதிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே சிறை காவலரும் அதற்காக சிறை கதவை திறந்ததாக தெரிகிறது. கதவு திறக்கப்பட்ட உடனே, அந்த கைதிகள் சிறை காவலரை தாக்கியுள்ளனர்.

மேலும் அவர்களை தடுக்க முயன்ற சக காவலர்கள் என மொத்தம் 4 காவலர்களை கைதிகள் தாக்கிவிட்டு, சிறையின் பிரதான வாயில் வழியாக அந்த 17 கைதிகளும் தப்பியோடியுள்ளனர். அவ்வாறு தப்பியோடும்போது, ஒரு சிறை காவலரின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினையும் பறித்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த கைதிகள் தாக்கியதில் படுகாயமடைந்த 4 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் சிறை காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
200 விசாரணை கைதிகள் மட்டும் அடைக்கப்படும் இந்த சிறைச்சாலையில், சுமார் 334 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தது பலர் மத்தியிலும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வலிப்பு வந்ததாக கூறி நாடகமாடி, சிறை காவலர்களை தாக்கி, அவர்களிடம் இருந்தே தங்க சங்கிலியை பறித்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.