விஜய் தொண்டர்களும், ரசிகர்களும் உண்மையாகவே கல்வியறிவு பெற்றிருக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசுப் பள்ளி சுற்றுச் சுவர் முழுக்க ஜனநாயகன் திரைப்படம் குறித்த போஸ்டர்கள் ஒட்டி கல்விக் கூடத்தின் மாண்பையே சிதைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான திரு. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் கொண்டாட எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவர்களின் கொண்டாட்டங்களுக்காக அரசுப்பள்ளி சுவர்களை இப்படி பாழ்படுத்தியிருப்பது இவர்களெல்லாம் உண்மையாகவே கல்வியறிவு பெற்றிருக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிகளின் சுவர்கள் ஒன்றும் தியேட்டர் வாசல்கள் அல்ல. கட்அவுட்களையும், போஸ்டர்களையும் ஒட்டுவதற்கு. பள்ளிக்கு வரும் மாணவர்கள் திரைப்பட போஸ்டரை பார்த்து என்ன மனநிலையில் கல்விக் கூடத்திற்குள் நுழைவார்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போஸ்டர்களை ஒட்டியிருப்பது அநாகரீகச் செயல்.
பொன்மொழிகளும், கல்வி குறித்த தகவல்களும் இடம்பெற வேண்டிய சுவரில் இன்று ஜனநாயகன் திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது தவெக ஆட்சியில் ரீல்ஸ் மற்றும் போஸ்டர் கலாச்சாரங்கள் வரம்பு மீறி கல்விக் கூடங்கள்வரை சென்று மாண்பைச் சிதைக்கின்றன.
உடனடியாக இந்த சுவரொட்டிகளை அகற்றியும், மேலும் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.