கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் உதவி ஆய்வாளராகபணியாற்றி வரும் பயரப்பா என்பவர் மீது அவரது மனைவி ரேவதி வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி புகாரை கொடுத்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பயரப்பாவை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தென்மேற்கு பிரிவு காவல் துணை ஆணையர் அனிதா ஹட்டான்னவர் கூறுகையில், உதவி ஆய்வாளர் பயரப்பா மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மனைவியை மிரட்டியுள்ளார். பயரப்பாவின் மனைவியான வழக்கறிஞர் ரேவதி, கடந்த 12-ந் தேதி நடந்த குடும்ப பிரச்னையின் போது, பயரப்பா தம்மையும் தனது தந்தையையும் கத்தியால் வெட்ட முயன்றதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட ரேவதி அளித்த புகாரில், தங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகள் தங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு பயரப்பா தனது பெற்றோரிடம் இருந்து 50 லட்சம் வரதட்சணை, மனை மற்றும் வீடு வாங்கி வருமாறு கேட்டு சித்ரவதை செய்யத் தொடங்கினார்.
மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தாக்குவதுடன், இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ‘லவ்யூ, மிஸ்யூ’ என மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட போது, தனது நடத்தையை சந்தேகப்பட்டு குழந்தையும் தனது இல்லை என கூறி மனரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

மேலும், வீட்டின் அருகே ரவுடிகளை திரட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், ரேவதியின் பொருட்களை வீட்டை விட்டு வெளியே போட்டுளளார் என அனிதா ஹட்டான்னவர் தெரிவித்தார். ஏற்கனவே தொழிலதிபர் ஒருவரிடம் 50 லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் லோக் ஆயுக்தா காவல்துறையினரால் பயரப்பா கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.