தமிழகம் முழுவதும் 9,804 பேரிடம் மோசடி செய்த ரூ.545 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை ( மியூல் வங்கி கணக்குகள் ) கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்பட 837 பேரை சைபர் க்ரைம் 48 மணி நேர தேடுதல் வேட்டையில் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பல்வேறு சலுகைகளை கூறி சைபர் குற்றவாளிகள் பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் 9,804 பேரிடம் சைபர் குற்றவாளிகள் ரூ.545.27 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தேசிய சைபர் க்ரைம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி விசாரணை நடத்திய போது, சைபர் குற்றவாளிகளுக்கு மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதும், அவர்கள் உதவியுடன் குற்றவாளிகள் பொதுமக்களிடம் கமிஷன் அடிப்படையில் அவர்களின் வங்கி கணக்குகளை மோசடிக்கு பயன்படுத்தி வந்ததும் உறுதியானது.
அதைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சத்தின் அறிவுத்தலின்படி மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் மற்றும் வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதன்படி மாநில சைபர் க்ரைம் காவல்துறை இயக்குநர் பாலநாகதேவி இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதனை கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகரங்கள் வாரியாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் வெளிநாடுகளில் உள்ள சைபர் குற்றவாளிகளுக்கு இடைத்தரகர்களாகவும் மற்றும் மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரிடம் கமிஷன் அடிப்படையில் அவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர்களில் சைபர் குற்றவாளிகளுக்கு தங்களது வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக மாநிலம் முழுவதும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மாநிலம் முழுவதும் நடந்த 48 மணி நேர சோதனையில் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஏஜென்ட்கள் மற்றும் வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட நபர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள், 4 லேப்டாப், 1 பென் டிரைவ் ரூ.1,02,000 ரொக்கம், 114 வங்கி பாஸ்புக்குகள், 29 காசோலைப் புத்தகங்கள், 73 ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள், 1 கிரெடிட் கார்டு மற்றும் 2 இதர மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த மோசடிக்கு பயன்படுத்திய 155 செல்போன் எண்கள் மற்றும் 58 வங்கிக் கணக்கு விவரங்கள் அடையாளம் காணப்பட்டன. குற்றவாளிகள் மோசடி மூலம் பெறப்படும் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி, மோசடி பணத்தை பணமாக எடுத்து கொள்வதற்கு பயன்படுத்தும் வங்கி கணக்குகளை ‘மியூல் வங்கி கணக்குகள்’ என்ற கூறப்படுகிறது.
அந்த வகையில் மாநில சைபர் க்ரைம் காவல்துறையினர் 2 நாள் நடவடிக்கையின் போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களின் மேற்பார்வையில், பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக 601 வழக்குகுள் பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள் உள்பட 837 பேர் கைது செய்யப்பட்டனர்.