கடந்த வாரம் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் சூலூர் எம்எல்ஏ சுகுமார், “முன்னாள் முதலமைச்சர் மக்கள் மனதில் இல்லை” என்று கூறினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “கடந்த கால ஆட்சியின் முதலமைச்சர் மக்கள் மனதில் இல்லை என்று ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். நீங்கள் தேர்தலில் வாங்கிய சீட்டு 108 தான். எதிரில் இருப்பவர்கள் உங்களை விட அதிகமாக வாங்கியுள்ளோம். கட்சியாக பிரிந்து இருக்கலாமே தவிர மொத்தமாக உங்களை விட அதிக வாக்குகள் பெற்று அமர்ந்துள்ளோம். நாங்கள் 72 தொகுதிகளில் வென்றுள்ளோம்” என்று ஆவேசமாக பேசினார்.

அப்போது தவெக எம்எல்ஏக்கள் நேருவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய நேரு, “நான் சொல்லிடறேன் இருங்க. நீங்கள் வாங்கிய 108 தொகுதிகள் 35 சதவிகிதம் தான். நாங்கள் தனித்தனியாக பிரிந்திருந்தாலும் கூடுதலாக வாங்கியுள்ளோம். எங்களுடன் இருந்தவர்கள் தான் உங்களுக்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்கள் தலைவர் எப்போதும் மக்களின் மனதில் இருப்பவர்.
பெரியார் போன்ற திராவிட கொள்கைகளில் இருந்து வந்தவர் என்று நீங்கள் கூட சொன்னீர்கள். மக்கள் மனதில் எங்கள் தலைவரும், திராவிடமும் இருப்பதால் தான் உங்களுக்கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். அதனால் தான் சட்டமன்ற உறுப்பினராக இங்கே நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என கே.என். நேரு தெரிவித்தார்.