மனமகிழ் மன்றங்களில் மது விலக்கு ஆயத்தீர்வை அதிகாரிகளை தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி சரவணன் உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்க தலைவர் வீரபாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு முழுவதும் மனமகிழ் மன்றம் முறையாக அனுமதி பெற்று நடத்தி வருகிறோம். தற்போது ஆளுங்கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், யூடியூபர்கள் என்ற பெயரில் மனமகிழ் மன்றத்திற்குள் நுழைந்து சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தரிக்கின்றனர்.
மேலும் அங்கு மது அருந்தி கொண்டிருப்பவர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பரப்பி வருகின்றனர். இதனை வைத்து உரிமையாளரிடம் பணம் கேட்டும் மிரட்டி வருகின்றனர். நாங்கள் அரசிடம் முறையாக அனுமதி பெற்று மதுபானக்கூடம் நடத்தி வருகிறோம். மதுபானக்கூட நடைமுறைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வருகின்றனர். எனவே மனமகிழ் மன்ற உரிமையாளரின் உரிமைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீராகதிரவன் ஆஜராக இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சரவணன் மனமகிழ் மன்றங்களில் மது விலக்கு ஆயத்தீர்வை அதிகாரிகளை தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக்கூடாது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி சரவணன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.