தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளனர். இந்நிலையில் “சோஃபா செட் இல்லை.. பீரோ இல்லை.. லாக்கரே வந்தாலும் தேமுதிக தங்கள் நிலையில் இருந்து மாறாது. கொள்கை முக்கியம். நமக்கு என்ன அழைப்பு வரலை என்று நினைக்கிறீர்களா. இன்றைய முதலமைச்சரே தன்னிடம் பேசியதாக விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “சோஃபா செட் இல்லை.. பீரோ இல்லை.. லாக்கரே வந்தாலும் தேமுதிக தங்கள் நிலையில் இருந்து மாறாது. கொள்கை முக்கியம். ஒரு கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறுவார்களாம். தேர்தலுக்கு பிறகு தங்களின் சுயலாபத்துக்காக இன்னொரு கூட்டணியில் சேர்வார்களாம். நமக்கு என்ன அழைப்பு வரலை என்று நினைக்கிறீர்களா. இன்றைய முதலமைச்சரே அழைத்தார்.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. ஒரு கொள்கை, ஒரு முடிவை நாம் எடுத்துவிட்டால் அந்த முடிவில் நிச்சயமாக நாம் உறுதியாக நிற்போம். அதற்கு இதுதான் சான்று. ஏனென்றால் கொள்கை மிகவும் முக்கியம்.

சுய லாபத்துக்காக கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடு தேமுதிகவுக்கு எப்போதும் கிடையாது. அதிமுகவில் மேலும் 25 எம்எல்ஏக்கள் தவெக போகிறார்களாம் என செய்தியாளர்கள் கேட்டனர். கட்சி மாறி போனவர்களின் வரலாறு என்ன என்பதை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது.
கேப்டனுக்காகவே வாழ்ந்த என் கண்முன் நிற்கும் வெற்றி வீரர்களே நீங்கள் தான் நாளைய வரலாறு. எத்தனையோ எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு சென்றனர். இதே மேடையில் முன் உதாரணமாக கேப்டனுக்காகவும், கட்சிக்காகவும் உண்மையாக இருக்கிறார்களே. பார்த்தசாரதி, சிவக்கொழுந்து, சுபா ரவி ஆகிய 3 பேர் இருக்கின்றனர்.

தமிழகத்தில் அப்படி 6 பேர் இருக்கிறார்கள். எல்லாருமே தலைவர் அவர்களை நேசித்தவர்கள். நேசித்தவர்களை நெஞ்சில் பதிய வைத்து, கட்சிக்காக கேப்டனுக்காக தங்களின் இறுதி மூச்சு வரை தலைவர் நாமத்தை சொல்வேன் என்கிறார்களே அதுதான் வரலாறு.
அரசியலில் வெற்றி வரும், தோல்விவரும். அதையெல்லாம் கண்டு அஞ்ச கூடிய கட்சி தேமுதிக அல்ல. எதற்கும் அஞ்சாமல் நாம் கொண்ட கொள்கையில் நேர்மையாக பயணிப்போம். தலைவரின் லட்சியத்தை வென்றெடுத்து அவரின் கனவை நனவாக்குவோம். என் மக்களே.. மக்களே என்று மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு தலைவர்.

மனிதராய் பிறந்து, புனிதராய் வாழ்ந்து இன்று தெய்வமாகியுள்ளார். அவர் எங்குமே போகவில்லை. நம்முடன் தான் இருக்கிறார். கரைவேட்டி கட்டி உட்கார்ந்துள்ளீர்களே. உங்களில் நான் கேப்டனை பார்க்கிறேன். நீங்கள் தான் கேப்டன் என்பதை சொல்கிறேன். விருதாசலத்துக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவோம்” என பிரேமலதா தெரிவித்தார்.