தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழருமான பி.எஸ்.டி. புருஷோத்தமன் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் களப்போராளி தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் புதல்வர் ஆவார். தோழர் புருஷோத்தமனுக்கு கிருஷ்ணவேணி என்ற துணைவியாரும் ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாநில தலைவரான தோழர் புருஷோத்தமன் அமைப்பின் பணி சார்பாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது உடல் நலம் குறைவு ஏற்பட்டு திருவாரூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து காலை மருத்துவமனைக்கு சென்ற தீக்கதிர் நாளிதழ் திருச்சி பதிப்பு பொறுப்பாளரும், சிபிஎம் மாநிலகுழு உறுப்பினருமான ஐ.வி. நாகராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளர் டி. முருகையன் உள்ளிட்ட தோழர்கள் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவமனை முதல்வரை சந்தித்து தோழர் புருஷோத்தமன் சிகிச்சை சம்பந்தமாக உடல் நலம் விசாரித்தனர்.

இவர்களுடன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கே.ஜி. ரகுராமன், பா. கோமதி, நகரச்செயலாளர் எம்.டி. கேசவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் தோழர் புருஷோத்தமன் காலமானார். தொடர்ந்து தோழரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தோழர் பி.எஸ்.டி. புருசோத்தமன் உடலை தோழரின் சொந்த ஊரான பாங்கல் கிராமத்தில் உள்ள இல்லத்திற்க்கு அனுப்பப்பட்டது.
அங்கே மறைந்த தோழர் புருஷோத்தமன் உடலுக்கு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் டி. முருகையன் மற்றும் TUJ திருவாரூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வர்க்க வெகுஜன அரங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள்,கட்சி தோழர்கள், செய்தியாளர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தோழரின் மறைவு செய்தி அறிந்து சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் கைப்பேசி வாயிலாக தோழரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தனர்.