என்ன.. ஆதவ் அண்ணா.., காலையிலேயே டைவர்ஷன் தெரபி ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே.. வெள்ளை அறிக்கையை எடுத்துட்டு வந்தீங்க.. ஒரு மனுஷன் ஒன்று அல்லது இரண்டு பொய்களை சொல்லலாம்.. அதுக்காக ஏக்கர் கணக்கில் இப்படிப் பொய் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என ஜல்லிக்கட்டு ஜூலி கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற “Start Run, Stop Drugs” விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மக்களுடன் இணைந்து ஓடியது சமூக வலைதளங்களில் தனி டிரெண்டாக மாறியுள்ளது.
இது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இந்திய வரலாற்றிலேயே, ஏன் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு முதலமைச்சர் மாரத்தானில் இறங்கி 3 கி.மீ தூரம் ஓடியிருப்பது இதுதான் முதல் முறை. நம் முதல்வர் விஜய் மட்டுமே இந்த வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார் எனப் பேசினார். இந்த வீடியோ வைரலான அடுத்த சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது
இது தொடர்பாக ஜூலி வெளியிட்ட வீடியோவில், ஆதவ் அண்ணா, காலையிலேயே டைவர்ஷன் தெரபி ஆரம்பிச்சிட்டீங்க போல இருக்கே.. வெள்ளை அறிக்கையை எடுத்துட்டு வந்தீங்க.. ஆனால் திமுக ஊழல் செய்துள்ளது என்பதை உங்களால் நிரூபிக்க முடியல. அதை டைவர்ட் செய்வதற்காக, இதுவரைக்கும் இருந்த முதலமைச்சர்களிலேயே ஒரு மாரத்தான் போட்டியில் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் ஓடிய ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நம்முடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மட்டும்தான் என்று சொல்கிறீர்கள்.
தமிழ்நாடு வரலாற்றில் வேறு எந்த முதலமைச்சரும் இவ்வாறு ஓடியதே இல்லை என்றும் சொல்கிறீர்களே.. இந்தியாவிலேயே 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய முதல் முதலமைச்சர் இவர்தான் என்று நீங்கள் சொல்வதற்காக, உங்களுக்காக ஒரு சிறிய உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நம்முடைய ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியை மிகக் குறைந்த மணி நேரங்களிலேயே ஓடி முடித்திருக்கிறார்.
மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல ஹரியானா மாநில முதலமைச்சர் நயப்சிங் சைனியும், மாரத்தான் ஓடுவதில் திறமை படைத்தவர். கோவா மாநில முதலமைச்சரும் இதில் ஆர்வம் கொண்டவர்தான். நாம ஏன், இவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நம்முடைய மாநிலத்தை சேர்ந்த மா. சுப்பிரமணியன் கூட தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஜாக்கிங் செய்வார்..
அங்குள்ள பார்க்குகளில் விளையாடும் இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டிருக்கிறார்.. அதுமட்டுல்ல அவர் ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா இப்படி ஏகப்பட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார். தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும், காலையிலேயே இது போன்ற ஒரு திசைதிருப்பும் உத்தியை தவெக கையாண்டு வருகிறது.
ஒரு மனுஷன் ஒன்று அல்லது இரண்டு பொய்களை சொல்லலாம்.. அதுக்காக ஏக்கர் கணக்கில் இப்படிப் பொய் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? பாட்டிலோடு போன கதையெல்லாம் ஞாபகத்துக்கு வரும்தானே? ஞாபகத்துக்கு வரலியா? நாமெல்லாம் போதைப்பொருள் ஒழிப்புக்கு ஓடலாமா? தவறில்லையா?” என ஜூலி வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.