பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதால், இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிவெப்பமடையும் போது ஏற்படும் ஒரு உலகளாவிய காலநிலை மாற்றத்தை எல் நினோ என்பர்.
பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றுகள் பலவீனமடைவதால், கடலின் வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியை நோக்கிப் பரவத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தால் உலகெங்கும் காற்றின் திசையும், வளிமண்டல அழுத்தமும் மாறி, சில நாடுகளில் கடுமையான வறட்சியையும், சில நாடுகளில் கோர வெள்ளத்தையும் உருவாக்குகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சாதாரணமாக இருந்த பசிபிக் கடல் சூழல், பின்னர் ‘லா நினா’ எனப்படும் குளிர்ச்சியான நிலைக்கு மாறி, தற்போது மீண்டும் அதிவெப்பமடைந்து எல் நினோ நிலையை எட்டியுள்ளது. கடந்த மே மாத கணக்கெடுப்பின்படி, பசிபிக் பெருங்கடல் மட்டுமன்றி, இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதிகளும் வழக்கத்தை விட அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன.

மான்சூன் மிஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த எல் நினோ சூழல் மிதமானது முதல் கடுமையான நிலைக்கு தீவிரமடைய வாய்ப்புள்ளது. பொதுவாக எல் நினோ வலுவடையும் காலங்களில் இந்தியாவில் பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுவது வழக்கம் என்பதால், இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்தியாவின் பருவமழைக்குச் சாதகமாக இருக்கக்கூடிய ‘இந்தியப் பெருங்கடல் டைபோல்’ சூழல் தற்போது நடுநிலையாகவே நீடிக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதியில் லேசான உட்புற வெப்பம் காணப்பட்டாலும், அது ஐஓடி நிலையை மாற்றுமளவிற்கு வலுவாக இல்லை. இது வரும் பருவமழை காலம் முழுவதும் நடுநிலையாகவே தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக எல் நினோவின் வறட்சிப் பாதிப்பை இந்தியப் பெருங்கடல் டைபோல் ஓரளவிற்குச் சமன் செய்யும் என்றாலும், அது தற்போது நடுநிலையில் இருப்பதால், தீவிரமடைந்து வரும் எல் நினோவை இந்திய வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.