திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொறுக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆதிரங்கம், சேகல் கட்டிமேடு, பிச்சன்கோட்டகம், மேலமருதூர், பாமணி கொக்கலாடி, கொறுக்கை உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் ஆதிரெங்கம், சேகல், பிச்சன்கோட்டகம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய கர்ப்பிணி பெண்கள் பேருந்து வசதி இல்லாததால், வாடகைக்கு ஆட்டோ மற்றும் கார் எடுத்துக்கொண்டு சென்று வருகின்றனர். ஏற்கனவே ஆதிரெங்கம் வழியாக சென்று கொண்டிருந்த மினி பேருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கொறுக்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நுழைவு வாயில் முற்றிலும் சேரும் சகதியுமாக உள்ளது. சுகாதார நிலையத்திற்கு நுழைவதற்கு ஒரே வழி மட்டும் தான் உள்ளது. அந்த ஒரு வழியும் சேரும் சகதியமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் வழுக்கி விழும் நிலையில் இருப்பதால் மிகுந்த அச்சப்படுகின்றனர். மேலும், அங்கு பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மழைக்காலங்களில் உள்ளே சென்றுவர மிகுந்த சிரமப்படுகின்றனர்.
எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, சுகாதார நிலையத்திற்கு செல்லும் வாயில் பகுதியை கான்கிரீட் அல்லது ஃபேவர் பிளாக் சாலையாக அமைத்து தர பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.