ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கில் அவரது பெயரை எஃப்ஐஆரில் சேர்க்காமல் இருப்பதற்காக வாங்கப்பட்ட லஞ்ச பணத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண், ரூ 24 கோடிக்கு தங்கம் வாங்கியதாக கூறப்படுவது குறித்து விசாரணையை முடுக்கிவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த 2025 அக்டோபர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவையும், பென்டிரைவ் ஒன்று ஒப்படைக்கப்பட்டது. அதில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. விசாரணையில் அக்காட்சிகளில் இருப்பது கிரானைட் தொழிலதிபரும், பிரபல ஜெம் குழுமத்தின் தலைவருமான ஆர்.வீரமணி என்பதும், தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் நடந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பவத்திற்கு உதவியாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோருடன் சேர்த்து தொழிலதிபர் வீரமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக அருண் இருந்தபோது ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வன்முறை வழக்கு விசாரணை அதிகாரியாக சென்னை காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையராக இருந்த யாஸ்மின் பணியாற்றியிருந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி குற்றம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. வீடியோவில் இருக்கும் நபர் வீரமணிதான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என பல்வேறு காரணங்களை காட்டி வழக்கை முடிக்கக் காவல்துறையினர் முயன்ற நிலையில், சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம் அதனை நிராகரித்து மீண்டும் விரிவாக விசாரிக்க உத்தரவிட்டது. ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கை எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது.
இதையடுத்து எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே வீரமணி மீதான குற்றத்தை மூடிமறைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவருவதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மேலும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்தது குறித்து மற்றொரு குழு காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரணையை கையாண்ட விதம் குறித்து சென்னை காவல் கமிஷனராக இருந்த அருணுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடந்துள்ளது.அவரிடம் 80 கேள்விகளை எஸ்ஐடி கேட்டு, வாக்குமூலமாக பெறப்பட்டு ள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட அருணுக்கு எந்த பணியிடமும் தரப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பத்திரிகையாளர் வாராகி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வாராகி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த அக்டோபர் 1, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி ஆதாரங்களையும் தகவல்களையும் நான் கொடுத்துள்ளேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ 147 கோடி மதிப்பிலான சொத்துகள் ரூ 70 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இதில் கிடைத்த லஞ்ச பணத்தில் சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையில் இருந்து ரூ 24 கோடிக்கு ஐபிஎஸ் அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாக தனக்கு தகவல் கிடைத்தது என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க முன்னாள் நிர்வாகியின் மகன் பிரகாஷ் கண்ணையா மூலமாக கைமாறியுள்ளதும், இந்த வழக்கு குறித்து விசாரணை தொடங்கியதுமே அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். லஞ்சப் பணத்தை மறைக்கவே இந்த தங்கம் வாங்கப்பட்டதா என்பதை அறிந்த கொள்ள ரசீதுகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.