கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் பயின்று வருகிறார். விலவூர் பகுதியை சேர்ந்த இவரது தோழி கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக இளைஞரணியில் முக்கிய பொறுப்பில் உள்ள கல்லூரி மாணவியுடன் ஒன்றாக படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மாணவி, தோழியான தவெக நிர்வாகியுடன் பேருந்திற்காக கல்லூரி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவெக கன்னியாகுமரி மத்திய மாவட்ட அளவிலான பொறுப்பில் இருக்கும் நபர் சொகுசு காரில் வந்துள்ளார். தவெக பெண் நிர்வாகியான மாணவியை கண்ட தவெக பிரமுகர், அவரிடம், நானும் ஊருக்குத்தான் செல்கிறேன். எனது காரில் வாருங்கள். நான் உங்கள் வீடுகளில் விடுகிறேன் எனக்கூறி, மாணவிகள் இருவரையும் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார். மூலச்சல் பகுதியில் தவெக நிர்வாகியான மாணவியை இறக்கி விட்டுவிட்டு, உடன் வந்த குலசேகரத்தை சேர்ந்த மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இடையில் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நின்றதாக தெரிகிறது.
அப்போது, கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி கோபத்தில் அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து தவெக நிர்வாகி, மாணவியிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவருடைய வீடு அருகே இறக்கி விட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியை கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையினர் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காமல் சமாதனம் செய்து அனுப்பி வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.