இந்த வருடம் மழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்…. அதனால்தான், வடகிழக்கு பருவமழையாவது நல்லபடியாக பெய்து, ஊரில் விவசாயம் செழிக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஒரு வித்தியாசமான வேண்டுதலை நடத்தி இருக்கிறார்கள். அதுவும் ஆண், பெண் தவளைகளுக்கு ஊரே சேர்ந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தவளைகளின் கத்துதல் மழைக்காலம் தொடங்குவதைக் குறிக்கும் அறிகுறி. ஆகையால், தவளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதன் மூலம் வருண பகவான் மகிழ்ச்சியடைந்து நல்ல மழையைத் தருவார் என்பது இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும்.
நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் தவளைக்கு மஞ்சள் பூசுதல், மாலை மாற்றுதல் மற்றும் தாலி கட்டுதல் என அனைத்து சடங்குகளும் மனிதர்களின் திருமணத்தைப் போலவே பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுகின்றன. இந்தத் திருமணத்தில் ஊர் மக்கள் அனைவரும் மணமகன், மணமகள் வீட்டார்களாகப் பிரிந்து பங்கேற்பார்கள். திருமணம் முடிந்ததும் ஊரே சேர்ந்து பிரம்மாண்டமான கிடாய் வெட்டி விருந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். இப்படி ஒரு சம்பவம் தான் கோயம்புத்தூரில் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் நேற்று மாலை ஊர்கவுண்டர் வீட்டில் இருந்து திருமண ஏற்பாடுகள் தொடங்கின. ஆண் தவளைக்கு தங்க செயின் அணிவித்தார்கள். பெண் தவளைக்கு தங்க நெக்லஸ் அணிவித்து, மல்லிகை பூ, ரோஜா பூக்களாலும் அலங்காரம் செய்தார்கள். அதன்பிறகு 2 தவளைகளையும் தெர்மாக்கோல் மற்றும் தட்டு குச்சிகளை வைத்து தயாரிக்கப்பட்ட சிறிய மாட்டு வண்டியில் உட்கார வைத்தனர்.

தவில், நாதஸ்வரம் முழங்க, மாப்பிள்ளை அழைப்பும் நடத்தப்பட்டது.. பிறகு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தவளைகளை விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது ஆண்-பெண் தவளைகள் தனித்தனியாக வைக்கப்பட்டு பொதுமக்கள் குடை பிடித்து வர பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. திருமணத்துக்கு தேவையான அனைத்து சீர்வரிசை பொருட்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமண சடங்குகளும் ஆரம்பமானது. ஆண் தவளையை கையில் வைத்திருந்தவர், பெண் தவளைக்கு தாலி கட்டினார்… இப்படி 2 தவளைகளுக்கும் ஊரே சேர்ந்து திருமணம் செய்து வைத்தது. திருமணம் முடிந்ததும் தவளைகளை அப்படியே விட்டுவிடவில்லை. மறுபடியும் அவற்றை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து, 2 தவளைகளையும் கிணற்றில் விட்டனர். நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும். ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டனர்.
அதன் பின்னர் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மக்கள் அரிசி கொடுத்துள்ளனர். அந்த அரிசியை வைத்து சாப்பாடு தயார் செய்யப்பட்டது.. தொடர்ந்து கிடாய் வெட்டி, இரவில் கிராம மக்கள் அனைவருக்கும் திருமண விருந்தும் நடத்தப்பட்டது. தவளைகள் திருமண விழாவின்போது ஊர் மக்கள் சார்பில் மதுரை வீரன் சுவாமிக்கு இந்த கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பிறகு அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது.
செய்தியாளர்: K. அபிராம் பிரசாத்