நாமக்கல் மாவட்டம், இராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சாம்பாளையம் கிராமத்தில் கிராமப்புற மக்களின் நேரடி பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தேர்வு செய்யும் ‘டிஎன் வெற்றி’ திட்டத்தின் மாதிரி முன்னெடுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தமிழக கிராமப்புறங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து அவற்றைச் செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசால் ‘டிஎன் வெற்றி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக அரசால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகளே திட்டமிடும் நடைமுறைக்கு மாற்றாக, கிராமப்புற பொதுமக்களின் நேரடி கருத்துக்களுக்கும் கோரிக்கைகளுக்கும் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாகும். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் முன்வைக்கும் முன்னுரிமைக் கோரிக்கைகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக, ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு சிற்றூரிலும் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதிக்கான ‘சமூக வரைபடத்தை’ வரைந்து, அதில் அத்தியாவசியத் தேவைகளைக் குறிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், இராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சாம்பாளையம் கிராமத்தில் மாதிரி திட்டமிடல் பணிகள் நடைபெற்றன.

இந்த திட்டத்தின் கீழ் மக்களின் தனிநபர் குறைகள் மற்றும் கிராம மேம்பாட்டிற்கு தேவையான வசதிகள் என்ன செய்ய வேண்டும் என்று கிராமத்தின் வரைபடம் வரைந்து மக்களிடம் குறைகளை ஊராட்சி நிர்வாகம் கேட்டறிந்தனர் .இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் வரையப்பட்ட சமூக வரைபடத்தின் மூலம் தேவைகளை எடுத்துரைத்தனர்.
நாமக்கல் மாவட்ட செய்தியாளர்: K. குமரவேல்