தமிழக சட்டசபை வரலாறு காணாத வகையில் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இதில், நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், “கடந்த ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இங்கே ஆதாரம் கேட்கிறார்கள், நானே ஒரு ஆதாரம் தான், நானே ஒரு சாட்சி தான். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த அவையில் இல்லை. கடந்த மூன்று நாட்களாக இந்த சப்ஜெக்ட் போய்க் கொண்டிருக்கிற்து. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்கள் என் மீது வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும், விசாரணைக்கு நானே வருகிறேன். அவரை நேரடியாக ஃபேஸ் பண்ணலாம்.
டி நகரில் எந்த இடத்தில் எவ்வளவு பணம் கொடுத்தோம் எல்லாம் நானே சொல்ல முடியும். இது தான் சாட்சி. நான் சொல்லக்கூடாது என்று நினைத்தேன், ஆனால் வேறு வழி இல்லை. மைனாரிட்டி இன்ஸ்டிடியூஷனுக்கு எவ்வளவு பணம் வாங்குனீங்க என்று நானே சொல்ல முடியும்” என்று தெரிவித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி கடுமையான குற்றம் என்பதை மறந்து ஒரு அமைச்சராகப் பொறுப்பு வகித்துக்கொண்டு நானே லஞ்சம் கொடுத்தேன் என்று சட்டசபையில் சொல்லி ஒப்புதல் வாக்குமூலம் நிதி அமைச்சர் மரிய வில்சன் கொடுத்திருக்கிறார். ஆகையால், தான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சர் மீது முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டியது ஒரு தலையான கடமையாகும்.
லஞ்சம் கேட்டவர் மீது அமைச்சர் மரிய வில்சன் எந்த புகாரும் அளிக்காமல், சட்டசபையில் கூறி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் என்ன; லஞ்சம் கொடுத்து, குறுக்கு வழியில் அனுமதி வாங்கும் வகையில், மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தின் சட்ட ரீதியான குறைபாடுகள் என்ன? மேலும், தனிப்பட்ட நலனுக்காக, லஞ்சம் கொடுத்து, காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக மரிய வில்சன் இருக்கிறார்.
ஆகையால், அவரை, அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும் எனவே, அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த அமைச்சர் மரிய வில்சன் மீது, ஊழல் தடுப்பு, சட்ட நடைமுறையை தவிர்க்க, லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரே நேரடி சாட்சி என்று அவர் கூறியிருப்பதால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? இடைத்தரகர்கள் யாராவது இருந்தார்களா என்பதை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது லஞ்ச ஒழிப்புத்துறையின் கடமையாகும்.