சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் நீதிக்கட்சி ஆட்சியின் கீழ் அமைந்த இந்தியாவின் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றத்தை முறைப்படி கன்னாட் கோமகன் தொடங்கி வைத்த தமிழக சட்டமன்றம் நடுநிலைமை, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்து மக்கள் நலப்பணிகளுக்காகச் செயல்படுத்தி 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் பாரம்பரியம் கொண்டுள்ளது.
ராஜாஜி, காமராசர், கக்கன், பக்தவத்சலம், அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கருணாநிதி, M. G. இராமச்சந்திரன், அன்பழகன், J. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் முதலியவர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் இன்று ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 17-வது சட்டமன்றத்தை நடத்திக்கொண்டுள்ளது.
அப்பாவைக் காணோம், பார்ட்டி பண்ட், கரூர் கம்பெனி, 3 மணி நேரம் பாத்ரூமில் இருந்தார், சங்கி அமைச்சர், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை, லாட்டரி மருமகன், மாமனாரைக் கேளுங்க, நானே சாட்சி, இவையெல்லாம் ஊர்த் திருவிழாக்களில் நடக்கும் பட்டிமன்றங்களில் பயன்படுத்திய வார்த்தைகளோ, அரசியல் மேடைகளில் மூன்றாம் தரப் பேச்சாளர்கள் பேசிய அல்ல. 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலித்த வார்த்தைகள்.
மரபுகளை மதித்து, மாண்புடன் பேசவேண்டிய அமைச்சர் பெருமக்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குழாயடிச் சண்டையில் ஈடுபடும் காட்சிகள்தான் புனித ஜார்ஜ் கோட்டையை அலங்கோலப்படுத்தி இருக்கிறது. நிதிநிலை அறிக்கைமீதான ஆரோக்கிய விவாதங்கள், வாக்களித்த மக்களின் கோரிக்கைகள், மாநில உரிமை சார்ந்த விவகாரங்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் என அவையில் பேசப்படவேண்டிய விஷயங்களுக்கு மாற்றாக கேலி, கிண்டல் செய்வதிலும், அதற்கு எதிர்வினையாற்றுவதிலுமே கரைந்துபோகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்.
கிறிஸ்தவம் அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. எவ்வளவு தமிழ் படித்தாலும் சிலருக்கு இந்தப் பண்புகள் தெரிவதில்லை என்று ஒரு அமைச்சர், ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என்று ஒரு அமைச்சர், மதுரை சின்னப்பிள்ளை ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் லீக்காமல் இருக்க ஓரிங் என்பதை கண்டுபிடித்தார். இதனால் அவரது வீட்டுக்கே சென்ற வாஜ்பாய், மூதாட்டியின் காலில் விழுந்து கும்பிட்டார் என அமைச்சர் வாய் கூசாமல் பேசியது.

இந்நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக சில தவெக, திமுக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளை ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்வது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சட்டசபை நேரலையில் ஒளிபரப்பு ஆகிறது. அவையில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது மக்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். சட்டசபையின் மரபையும், கண்ணியத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இரண்டு தரப்புக்கும் உண்டு என்று பேசியது இவையெல்லாம் இதுவரை தமிழகம் கண்டதில்லை.
இந்நிலையில், வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது என தவெக அரசை கடுமையாக விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விமர்சித்த நிலையில், ”சட்டசபையில் மானியக் கோரிக்கையை தவிர்த்து அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிக் கொள்வதால் மக்களுக்கு என்ன பயன், இது “இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கு தேர்வுக்குக்கூட இப்படி தயாராகி இருக்க மாட்டாங்க; ராத்திரி பகலா பிரிப்பேர் பண்ணிட்டு வர்றோம்…
“ஆனா, இங்க எப்போ பார்த்தாலும்… சண்டை… சண்டை.. சண்டை.. பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைதான் வருகிறது, அவர் பேசாதவரை சட்டமன்றம் அமைதியாக இருக்கிறது. அவர் பேசினால்தான் சண்டை ஏற்படுகிறது. எனவே பொறுமை காக்கணும், மக்களுக்காக இங்க எல்லாரையும் பேச வைக்கணும்” என்று குறிப்பிட்டு, மற்ற உறுப்பினர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டது 100 ஆண்டுகளை கடந்து வரலாற்றுச் பாரம்பரியம் மிக்க சட்டமன்றத்திற்கு தலைகுனிவாகும்.
மேலும் மறுநாள் சட்டமன்றத்தில் பிரேமலதா பேசுகையில், விருத்தாசலத்தை கோயில் நகரமாக்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அத்துடன் அவர் தனது தொகுதி சார்ந்த விஷயங்களை பேசினார். பிறகு, “தம்பி ஆதவ் இல்லை, அதனால் நான் எனது பேச்சை 10 நிமிடத்தில் முடித்துவிட்டேன். அவையை 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். எனவே அவை நடவடிக்கைகளும் சீக்கிரம் முடிந்துவிடும்” என்று சொன்னது அதாவது, “கேப்டன்”பாணியில் ஆதவ் அர்ஜுனாவை சட்டமன்றத்தில் பிரேமலதா தெறிக்கவிட்டார் என்றே சொல்லலாம்.