நான் நம்பியவர்களே எனது முதுகில் குத்திவிட்டார்கள். உங்களை முதல்வராக்கியது தான் நான் செய்த குற்றமா…? சிறையில் கூட என்னை அழிக்கப் பார்த்தீர்கள்” என வி.கே. சசிகலா விமர்சித்தார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், நாதக மற்றும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது.
மேலும் வி.கே. சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், அதாவது அபுதமமுக கட்சியும் ராமதாஸ் தரப்புடன் களத்தில் நிற்கிறது. ஆகையால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் 23 -ந் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறயுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
ஆகையால், அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், வி.கே. சசிகலா மாநிலம் முழுக்க தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, சேலம் மாவட்டத்தின் எடப்பாடி தொகுதியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட வி.கே. சசிகலா. அப்போது, “யாரும் எளிதில் பெற முடியாத ஒரு மிகப் பெரிய அங்கீகாரமான முதல்வர் பதவியை இந்த கொங்கு மண்டலத்திற்கு வழங்க முடிவு செய்து, அதனை நிறைவேற்றியும் காட்டினேன்.

ஆனால், நான் நம்பியவர்களே எனது முதுகில் குத்திவிட்டார்கள். அவர்களுக்கு அப்படி நான் என்ன கெடுதல் செய்துவிட்டேன் என எனக்கே தெரியவில்லை… உங்களை முதல்வராக்கியது தான் நான் செய்த குற்றமா… உங்களை முதல்வராக்கியதற்காக என்னைக் கட்சியில் இருந்து தூக்கினீர்கள்… சிறையில் கூட என்னை அழிக்கப் பார்த்தீர்கள்” என்றார். மேலும் வி.கே. சசிகலா பேசுகையில், “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், போட்டியிடவே விடாமல் தடுப்பது என்ன நியாயம்? கல்யாண வீட்ல சீப்பை ஒளிச்சு வச்ச கதையா இருக்கு இவங்க பண்றது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய வி.கே. சசிகலா, “திமுக-வும் இபிஎஸ்-ஸும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில்தான் இருக்கிறார்கள். கொடநாடு வழக்கில் என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். இரு தரப்பும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டைச் சூறையாடுகிறார்கள். சொந்தத் தொகுதியான எடப்பாடியிலேயே அரசுப் பொறியியல் கல்லூரி இல்லை, சாலை வசதி இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தனது தொகுதிக்காகச் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி எதையும் கேட்கவில்லை” என வி.கே. சசிகலா விமர்சித்தார்.