மு.க.ஸ்டாலின் “பேச நா இரண்டுடையாய் போற்றி”என்று பேரறிஞர் அண்ணா சொல்லுவாரே! அதற்கு ‘வாழும் உதாரணம்’ மோடிதான்!

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருப்பெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, ’வாழ்வு’ மூன்று எழுத்து – வாழ்வுக்குத் தேவையான ’பண்பு’ மூன்றெழுத்து -பண்பிலே பிறக்கும் ’அன்பு’க்கு மூன்றெழுத்து – அன்பிலே சுரக்கும் ’காதல்’ மூன்றெழுத்து – காதல் விளைவிக்கும் – ’வீரம்’ மூன்றெழுத்து – வீரர் செல்லும் ’களம்’ மூன்றெழுத்து – களத்திலே பெறும் ’வெற்றி’ மூன்றெழுத்து – அந்த வெற்றிக்கு – நம்மை அழைத்துச் செல்லும் ’அண்ணா’ மூன்றெழுத்து! என்று தலைவர் கலைஞர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் புகழ்ந்தார்! அந்த அண்ணனைத் தமிழ்த்தாய்க்குத் தந்த காஞ்சிக்கு வந்துள்ளேன்!

நம்முடைய தலைவர் கலைஞர் வாழ்நாள் முழுவதும் எழுதியிருந்தாலும், அவர் நிறைவுக்கு முன் எழுதியது, மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுஜர் பற்றி தான்! அந்த மகான் பிறந்த திருப்பெரும்புதூரையும் உள்ளடக்கிய பரப்புரைக் கூட்டமாக இது அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் – திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்! அனைவருக்கும் வணக்கம்!

திருப்பெரும்புதூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டி.ஆர்.பாலு அவர்கள் போட்டியிடுகிறார். பாலுவை உங்களுக்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1986 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்! 17 வயதில் தீவிர அரசியலுக்குள் நுழைந்து, இன்று வரை, ஒரே கொடி! ஒரே இயக்கம்! ஒரே தலைமை! என்று பாதை மாறாத பயணமாகத் தனது கொள்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டவர். மூன்று முறை ஒன்றிய அமைச்சராகப் பதவியேற்று 12 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் சாதனைகளைச் சொல்ல எனக்கு நேரம் போதாது, அதை அவரே புத்தகமாகப் போட்டிருக்கிறார். அத்தகைய பாலுவை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது உங்கள் கடமை! என் கெழுதகை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களுக்குத் திருப்பெரும்புதூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு, திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளராகச் செல்வம் அவர்கள் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், இளைஞரணி உட்பட கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு தன்னுடைய உழைப்பாலும் மக்கள் தொண்டாலும் உங்களது உள்ளங்களில் இடம்பிடித்திருக்கிறார். மிகவும் அமைதியான குணமுடையவர்! எல்லாவற்றிற்கும் மேல் மக்களிடம் நற்பெயர் பெற்றவர். இவரை மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்.

இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடம் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தை நான் மேற்கொண்டேன். இதே கரசங்கால் பகுதியில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். அந்தக் கூட்ட மேடையில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, அதில் மக்களது கோரிக்கைகளைப் பெற்றேன். “ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், உங்கள் மனுக்களுக்கு தீர்வு காண்பேன்” என வாக்குறுதி கொடுத்தேன். ஆட்சிக்கு வந்த உடனே இதற்காகவே தனித்துறையை உருவாக்கி, கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்திக் காட்டிய நெஞ்சுறுதியுடன் உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன்.

அந்த பணியை முடித்தவுடன் நிற்கவில்லை, ’முதல்வரின் முகவரி’ என்ற பெயரில், கோட்டைக்கு எனக்கு வரும் மனுக்களுக்குத் தீர்வுகாண தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சேவைகளை ஒரு குடையின்கீழ் கொடுக்கும் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி காட்டினோம்.

நமது திராவிட மாடல் அரசின் கொள்கை ‘எல்லார்க்கும் எல்லாம்’ – ‘அனைத்து மாவட்டங்களுக்குமான சீரான வளர்ச்சி’. இதனால்தான், நான் ஆட்சிக்கு வந்தவுடன் கூறினேன். ”இது தனிப்பட்ட ஸ்டாலினின் ஆட்சி இல்லை, ஓர் இனத்தின் ஆட்சி”என்று பெருமையோடு சொன்னேன்.

ஒவ்வொரு தனிமனிதரின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்த்துப் பார்த்து அவங்களின் தேவைகளை நிறைவேற்றித் தரப் பாடுபடுகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை திட்டங்கள்! இந்தியாவே பாராட்டுகிறது! இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நமது திட்டங்களைப் பின்தொடர்கிறது! 2021 தேர்தல் அறிக்கையில், கூறிய திட்டங்கள் மட்டுமல்ல; சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவன்தான் இதோ உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

ஆட்சிக்கு வந்தவுடன் தொழில்வளத்தைப் பெருக்க, தொழில் முனைவோர்களுடன் கூட்டம் நடத்தினேன். அதில் அவர்கள் கேட்டுக்கொண்டது, நம்முடைய இளைஞர்கள் வேலை பெற, திறன்பயிற்சி தேவை என்று சொன்னவுடன், அதற்கான திட்டத்தை உருவாக்க ஆணையிட்டேன். அப்படி உருவாக்கிய திட்டம்தான், ’நான் முதல்வன் திட்டம்!’ அந்த திட்டத்தின் மூலம், இதுவரை 28 இலட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி இருக்கிறோம்.

திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டுமல்ல, அந்தத் திட்டம் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு, அந்த திறன்பயிற்சி எடுத்த இளைஞர்களின் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினேன். அந்தக் கூட்டத்தில், பேசிய ஒரு மாணவி கூறினார்கள், ”இந்த நான் முதல்வன் திட்டத்தால், எனக்கு எல்லாத் துறைகளைச் சார்ந்தும், படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது! அதனால் முதல் இண்டர்வியூ-இல் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில், அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது”என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்.

இன்னொரு மாணவர் கூறினார், “இன்றைக்கு நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி, எங்களுக்குப் பயிற்சி வேண்டும்! வசதி இருக்கின்றவர்களால் வெளியே நிறைய பணம் செலவு செய்து கோச்சிங் கிளாஸ் – டிரெயினிங் செண்டர் என்று சென்று படிக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்குவது இந்த நான் முதல்வன் திட்டம் எங்கள் கனவுகளுக்கான வாசல்களைத் திறந்து விடுகிறது”என்று பூரிப்போடு சொன்னார். அதனால்தான், இந்த நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கியபோது, என்னுடைய கனவுத்திட்டம் என்று சொன்னேன். இப்போது நம்முடைய கனவுகளை நனவாக்கும் திட்டமாக மாறி இருக்கிறது! இதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை!

இதே போன்று, இன்னொரு புரட்சிகரத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! அதற்கும் நான் எதிர்கொண்ட அனுபவம்தான் காரணம்! சென்னையில், ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்ட்டீங்களா”என்று எதார்த்தமாகக் கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை ”வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள், அதனால் சாப்பிடவில்லை”என்று சொன்னதும், அதிகாரிகளை அழைத்தேன்.

”பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரவேண்டும்! திட்டத்தைத் தயார் செய்யுங்கள்” என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், இது நம்முடைய தேர்தல் அறிக்கையில் கூட சொல்லவில்லை” என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன். “வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்காலத் தலைமுறை குழந்தைகள்தான்! அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்தோடு இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும்! இதை நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும். நிதிநிலை சரிசெய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஃபைலைத் தயார் செய்யுங்கள்”என்று உத்தரவு போட்டேன். இந்த ஸ்டாலின் போட்ட கையெழுத்தால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.

அடுத்த சாதனைத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்! தாய்மார்கள் இன்றைக்கு நமக்கு இவ்வளவு ஆதரவு தரக் காரணமான திட்டம்! தொலைக்காட்சியில் சகோதரி ஒருவர் பேசும் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் அந்தச் சகோதரி சொல்கிறார். ”வீட்டில் அத்தனை வேலையும் செய்வோம். ஆனால், வெளியில் யாராவது எங்களைப் பற்றி வீட்டுக்காரரிடம் கேட்டால், அவர், நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’என்று கூறுவார்! என்னதான் வேலை செய்தாலும், என்னுடைய சேமிப்பில் ஒன்றும் இருக்காது. ஆத்திர அவசரத்திற்கு ஒரு ரூபாய் இருக்காது. வீட்டுக்காரரிடம் கேட்கவும் தோன்றாது! ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் அண்ணன் தரும் ஆயிரம் ரூபாய், என்னுடைய சுயமரியாதைக்குக் கொடுக்கும் அங்கீகாரம்’என்று கண்ணில் நம்பிக்கையுடன் கூறிய அந்தத் தாய்மார் போன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், ’எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்’ மாதம் ஆயிரம் ரூபாய் என்று உரிமையோடு சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

அதுமட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, “மகளிர் சுதந்திரமாக, ஸ்டாலின் அய்யா பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறோம்” என்று சொல்லும், விடியல் பயணத் திட்டம்!

அதேபோன்று, ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம்! பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்கு வரும் என்னுடைய 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 மகள்களுக்கு ஆயிரம் ரூபாய் தரும், ’புதுமைப் பெண் திட்டம்’!

மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!

வெளியூரில் வேலைக்குப் போகும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’ திட்டம்!

ஒரு கோடி பேருக்கும் மேல் பயனடைந்திருக்கும் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்!

2 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி அவர்கள் குடும்பங்களையும் காப்பாற்றி இருக்கும் ’இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்!

இன்னும் சொல்லலாம்! நிறைய இருக்கிறது! அதற்குப்பிறகு, இது சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்! எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யவது மட்டும்தான், நம்முடைய ஒரே குறிக்கோள்! இப்படி பார்த்துப் பார்த்து, தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், பழனிசாமி என்ன கேட்கிறார்? ’நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா’என்று கேட்கிறார். பழனிசாமி அவர்களே…! உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதற்கு தெரியுமா? படத்தில் ஒரு டைலாக் வருமே, ’நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’என்று அதற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் இருக்கிறீர்கள் என்று பி.ஜே.பி. அரசு உங்களுக்கு விருது கொடுத்திருக்கும்!

நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம் பழனிசாமி அவர்களே… கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகிறோமே! அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விருது! இன்னொரு விருது காத்திருக்கிறது! ஜூன் 4-ஆம் தேதி ”நாற்பதுக்கு நாப்பது”என்ற விருது.

பழனிசாமி அவர்களே! wait and see! நீங்கள் பாழ்படுத்திய நிர்வாகத்தைச் சரிசெய்து தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தமிழ்நாடு எதில் எல்லாம் நம்பர் ஒன் தெரியுமா? பட்டுக்கும் – நெசவுக்கும் பெயர் போன காஞ்சி மண்ணில் சொல்கிறேன். ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ஏற்றுமதி ஆயத்தநிலைக் குறியீட்டில் ’நம்பர் ஒன்!’ எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் ’நம்பர் ஒன்!’ கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில், ’நம்பர் ஒன்!’ மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பில், ’நம்பர் ஒன்!’ 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், ’நம்பர் ஒன்!’ இப்போது நான் சொன்னது எல்லாம் நாங்கள் எடுத்த புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்!

பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14- வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். மாண்புமிகு அன்பரசன் இருக்கிறார். அவரது துறையில், ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாட்டை நம்முடைய ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், LEADER ஆக்கி இப்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டோம்.

எந்த சமூக – பொருளாதாரக் குறியீட்டை எடுத்துப் பார்த்தாலும், அதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத்தான் இருக்கும்! பழனிசாமி அவர்களே! நீங்கள் எதில் ’நம்பர் ஒன்’ தெரியுமா? பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்தீர்களே, அதில் மட்டும்தான் ’நம்பர் ஒன்!’ எப்படியெல்லாம் பிரதமர் மோடிக்கு – ஒன்றிய அமைச்சர்களுக்கு – பா.ஜ.க.வுக்கு லாவணி பாடினீர்கள்! ‘மோடிதான் எங்கள் டாடி’என்று சொன்னீர்களே!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க. இங்கு, இந்தியைத் திணித்தபோது நாம் எதிர்த்தோம். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர் என்ன சொன்னார்? அண்ணா மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார் என்று பச்சைப்பொய்களைப் பேசவைத்து அழகு பார்த்த பச்சோந்திதான், இந்தப் பழனிசாமி! அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் இயற்கைக் கூட்டணி என்று சொல்லி, செண்டிமெண்ட் மழை பொழிந்தவர்கள்தான் பழனிசாமி நாடக கம்பெனி!

இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி, இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அ.தி.மு.க சில இடங்களில் வென்று பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்”என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. “பொறுத்திருந்து பாருங்கள்”என்று வாய்தா வாங்கியிருக்கிறார் பழனிசாமி! இதுதான் அவரின் பா.ஜ.க. எதிர்ப்பு லட்சணம்!

எங்கேயாவது “பா.ஜ.க. எங்கள் கொள்கை எதிரி” என்று பழனிசாமி சொல்லியிருக்கிறாரா? பா.ஜ.க.வை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று ஏன் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை! ஏன் என்றால், முதுகு வளைந்து பாதம் தாங்கும் பழனிசாமியால் ஒருபோதும் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது என்பதே உண்மை! அ.தி.மு.க.வுக்குப் போடும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! பழனிசாமியின் பகல் வேஷங்களும் – பச்சைப்பொய்களும் இனி தமிழ்நாட்டு மக்களிடம் எப்போதும் எடுபடாது! இப்போது, நாட்டு மக்கள் இந்தியாவின் எதிர்காலம் இந்தியா கூட்டணியின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில், இருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது! மக்களிடம் இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிப் பெற்றுள்ள நம்பிக்கை இது! தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறோம்! பெரிய பட்டியலே இருக்கிறது!

உதாரணத்திற்கு நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள், மூன்று முக்கியமான துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை மட்டும் சொல்லலாமா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக பாலு இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தன.

இதுமட்டுமா! கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், பாடி பாலம்! அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே, 335 பாலங்களைக் கட்டி சாதனை செய்து இருக்கிறோம். அதனால்தான், தலைவர் கலைஞரே ’பாலம்’ பாலு என்று அழைத்தார். இதுபோன்ற சாதனைகள் தொடர, ஒன்றியத்தில் நாம் ஆட்சியில் இருக்கவேண்டும். அதற்காகத்தான், இந்த தேர்தலின் ஹீராவான தேர்தல் அறிக்கையை தி.மு.க.வும் – காங்கிரசும் வெளியிட்டிருக்கிறோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது. அதில், முக்கியமான சில வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்!

பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த சட்டத்திருத்தம்!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு பதிலாகப் புதிய சட்டம்!

விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது!

பொதுப்பட்டியலில் இருக்கும் அதிகாரங்கள், மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு!

விவசாயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்!

இப்படி மாநிலங்களுக்கும் – நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. அதேபோல், தி.மு.க.வின் வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

திருப்பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரை ஆறுவழிச் சாலையாக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்!

அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்குக் காஞ்சிபுரம் வழியாக செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும்!

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி உற்பத்தி தொடங்க உரிய நடவடிக்கை!

பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்களும் – ஜி.எஸ்.டி. சட்டமும் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாயிகள் கடன் தள்ளுபடி!

மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி!

மக்களைச் சுரண்டும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஏழைகளிடமிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பறித்த அவலநிலையைப் போக்க, அபராதம் விதிக்கும் முறை நீக்கப்படும்!

இப்படி நாம் நம்முடைய வாக்குறுதிகளையும் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் முன்வைத்து, ஆதரவு கேட்கிறோம்! வாக்கு கேட்கிறோம்!

ஆனால், மிக உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு, பிரதமர் மோடி எல்லாக் கூட்டங்களிலும் மிகவும் மலிவான – பிரிவினைவாத அரசியலை செய்துகொண்டு இருக்கிறார். சாதி – மதம் – உணவு என்று மக்களை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்றுதான், மோடி அவர்களின் மூளை சதாசர்வ காலமும் சிந்திக்கிறது.

இப்படி மக்களைப் பிளவுப்படுத்தச் சிந்திப்பதில் ஒரு விழுக்காடாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்து இருக்கிறாரா! மோடி? சிந்தித்து இருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா? வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கும். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில், எல்லாத் தரப்பு மக்களுக்கும் போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டதே! தனிமனிதர்கள் தொடங்கி மாநிலங்கள் வரை, எல்லோரையும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் கூட போராட வைத்திருக்கிறார்.

12 ஆண்டுகாலம் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்குப் பிரதமர் ஆனதும், மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. பிரதமர் ஆனவுடன் என்ன சொன்னார்? “மாநில முதலமைச்சராக இருந்ததால், எனக்கு மாநிலங்களின் பிரச்சினையும் தெரியும்! தேசத்தின் பிரச்சினையும் தெரியும்!”என்று சொன்னார். ஆனால், என்ன செய்கிறார்? ஆளுநர்களை வைத்து, மாநிலங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையைக் கொடுப்பதே மோடிதான்! ஒட்டுமொத்த தேசத்திற்கும், பிரதமர் மோடிதான் மிகப்பெரிய பிரச்சினை!

“பேச நா இரண்டுடையாய் போற்றி”என்று பேரறிஞர் அண்ணா சொல்லுவாரே! அதற்கு ‘வாழும் உதாரணம்’ மோடிதான்! பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பே இருக்காது. ‘நாரி சக்தி’என்று பெண்களை மதிப்பதாக வீரவசனம் எல்லாம் பேசுவார். மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை! மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மனச்சாட்சி இருக்கும் யாரும் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள்! அந்த பெண்களுக்கான நீதி எங்கே? குஜராத் வன்முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு அவர்கள் போராடிப் பெற்ற நீதியைக் கூட, குற்றவாளிகளின் விடுதலை மூலமாகக் கொச்சைப்படுத்தியது தான் பா.ஜ.க! காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே குழந்தை ஆசிபாவை சீரழித்து கொன்றுவிட்டு அந்த குற்றவாளிக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற கேடுகெட்ட கொடியவர்கள் இருக்கும் கட்சிதான் பா.ஜ.க.!

நாட்டுக்கு பெருமைதேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளி உலகத்திற்குச் சொல்லி, நியாயம் கேட்டபோதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றியதுதான் பா.ஜ.க. இதுதான் ‘நாரி சக்தி’ என்ற முகமூடிக்குப் பின்னால் இருக்கும் உண்மை முகம்!

ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் ஓதுவார்கள் ஆகியிருக்கிறார்கள். அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறார்கள். அதற்கு ஒரு படி மேல் போய், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயிலான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்களின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜன் அவர்களை நியமித்திருக்கிறோம். இப்படி முற்போக்குச் சிந்தனைகளோடு முன்னேறிக்கொண்டு இருக்கும் திராவிட மாடலைப் பார்த்தால் அவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.

பிரதமர் ஆனதும் மாநிலங்களை சுத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு, மறைமுகமாக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டியவர்தான் மோடி! இதை இந்தத் தனிப்பட்ட ஸ்டாலின் சொல்லவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் சொல்லவில்லை. மோடி அரசில் நிதி ஆயோக் தலைமை அதிகாரியாக இருக்கும் B.V.R. சுப்பிரமணியமே சில மாதங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தினாரே! மோடி பிரதமர் ஆனதும், மாநிலங்களுக்குப் போகும் நிதியை எப்படி குறைக்கலாம், அதை ஒன்றிய அரசு எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று, மோடி சதித்திட்டம் தீட்டியதாக அவர் சொல்லியிருக்கிறார். இதுதான் மாநிலங்கள் மேல் மோடிக்கு இருக்கும் போலி பாசம்!

அடுத்து ஒன்று சொன்னார்! ’டெல்லியில் இருக்கின்றவர்கள், மாநிலங்களை ஆளக்கூடாது என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு எல்லா அதிகாரங்களையும் டெல்லியில் ஒன்றிய அரசிடம் குவித்து, மாநில அரசுகளை நகராட்சிகளாக மாற்ற முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். வரி விதிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடம் இல்லை!

இதையெல்லாம் விட மோசமான செயல், அதிகாரிகளை நியமிக்க, டிரான்ஸ்பர் செய்யக் கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அதைத்தான் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகச் செய்தார். அரசு உயரதிகாரிகள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதும், அதை எதிர்த்து, “டெல்லி சர்வீசஸ் பில்” கொண்டு வந்தார். மாநில அரசின் முக்கிய அதிகாரங்களைத் துணைநிலை ஆளுநர் என்ற நியமனப் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்.

அதுமட்டுமா! பிரதமர் ஆவதற்கு முன்பு, “மாநிலங்களைப் பழிவாங்க மாட்டேன்”என்று சொன்னார் மோடி. ஆனால், நாட்டில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட்டணி முயற்சி எடுப்பார். முடியவில்லை என்றால், அந்தக் கட்சிகளை உடைக்கப் பார்ப்பார். அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவார். தன்னுடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பணியாத முதலமைச்சர்கள் மேல், சகட்டுமேனிக்கு ஊழல் குற்றச்சாட்டு வைப்பார். CBI, IT, ED போன்ற அமைப்புகளை வைத்து, தொல்லை செய்வார். அப்போதும் அவர்கள் உறுதியாக நின்றால், அவர்களைக் கைது செய்து பழிவாங்குவதில் மும்முரமாக இருக்கிறார்.

மோடியின் ஊழலுக்கு பணிந்துவிட்டால், உடனே, “மேட் இன் பி.ஜே.பி.” வாஷிங் மெஷினை எடுத்து வெளுத்து சுத்தமாக்கி, உலக யோக்கியர் என்று பட்டம் கொடுப்பார். இந்த லட்சணத்தில், மாநிலங்கள் மேல் அக்கறை இருப்பது போன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்!

இதே காஞ்சிபுரமும், சென்னையும் கடந்த டிசம்பரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது, அதற்கு ஒரு ரூபாயாவது ஒன்றிய அரசு நிவாரணமாகத் தந்ததா? நானே நேரில் சென்று, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். “இதோ தருகிறேன்”என்று சொன்னார். தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாம், டி.ஆர். பாலு அவர்கள் தலைமையில் உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்கள்! அவரும், “இதோ தருகிறேன்”என்று சொன்னார். ஆனால், இன்று வரை நிதியைத் தரவில்லை! மாநில முதலமைச்சரான என்னிடமே, பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி. இப்போது நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறோம். இனியும் மாநில உரிமைகள் பற்றியோ, கூட்டுறவுக் கூட்டாட்சி பற்றியோ, பிரதமர் மோடி பேசலாமா? அவருக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்கிறதா?

நாங்கள் மட்டும் இல்லை, வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் வாங்க அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றப் படி ஏறி இருக்கிறது. வறட்சி நிவாரணம் கேட்டு கர்நாடகம் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் நீதிக்காகவும் – நிதிக்காகவும் நீதிமன்றப் படி ஏற வைத்தவர்தான் பிரதமர் மோடி!

அதனால்தான் சொன்னேன்! மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள்? இப்போது புதிதாகப் பேட்டி என்ற பெயரில் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார். நேற்று கொடுத்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி சொல்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். இதைக் கேட்டுச் சிரிப்பதா! இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. பிரதமர் அவர்களே! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வளரவே முடியாது.

நாடு முழுவதும் பா.ஜ.க. ஜெயித்த 2014, 2019 தேர்தலிலே பா.ஜ.க.வை ஓரங்கட்டிய தமிழ்நாட்டு மக்கள், நாடு முழுவதும் நீங்கள் தோற்பது உறுதியாகி இருக்கும் இந்தத் தேர்தலில் உங்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள்? பத்தாண்டுகளாக ஒன்றியத்தில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சில், வாயில்தான் பாஜக வளர்கிறதே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதனால்தான் கூட்டணிக்கு உங்கள் கட்சியில் ரவுடிகளையும் கலவரம் செய்யும் எக்ஸ்பெர்ட்-களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் பாஜக எப்படி வளரும்? நீங்கள்தான் எப்போதும் மக்களை ஏமாற்றுவீர்கள் என்று பார்த்தால், இப்போது உங்களையே யாரோ தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என ஏமாற்றுகிறார்கள்.

அடுத்து இன்னொரு பொய்யைச் சிரிக்காமல் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி! காசி தமிழ் சங்கமத்தில் உத்தர பிரதேசம் சென்ற நம்முடைய மக்கள், அங்கு நடந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்களாம். அதற்கு யாரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நாம் நாளிதழ்களில் படித்து ஆதங்கப்பட்டது… உ.பி முதலமைச்சர் யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், 60 குழந்தைகள் இறந்ததன. மனித வளக் குறியீடு, ஊட்டச்சத்து, சட்டம் – ஒழுங்கு, தனிநபர் வருமானம் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் இடம் என்ன? பா.ஜ.க. ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலை என்ன? இதெல்லாம் எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் உங்கள் மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.

பத்தாண்டுகளாக நாட்டை பாழ்படுத்திய நிலை இனியும் தொடரக் கூடாது. “வேண்டாம் மோடி”என்று ஒட்டுமொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது! இன்னும் ஒருமுறை இந்த நாடு ஏமாந்தால், இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்! வரலாறுகள் திரித்து எழுதப்படும்! அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிற்போக்குக் கதைகள் புகுத்தப்படும்! மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும்! மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்! சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும்! புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் சட்டம் நாட்டை ஆளும்! இதையெல்லாம் தடுக்கும் வலிமையான ஆயுதம், மக்களான உங்களுடைய வாக்குகள்தான்! இன்றை விட்டுவிட்டு நாளை புலம்புவது நல்லவர்களுக்கு அழகல்ல! நாடு காக்க இன்றே தயாராகுங்கள்!

பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு! அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு! எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள். “பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது! ஜனநாயகமும் – சமத்துவமும் – சகோதரத்துவமும் வென்றது!” என்ற புதிய வரலாறு எழுத, திருபெரும்புதூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜி.செல்வம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

‘திராவிடம்’ என்ற சொல் யாருக்கெல்லாம் பயத்தைக் கொடுக்கிறதோ…! யாருக்கெல்லாம் பிடிக்காதோ…! அவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள்…!

திருவண்ணாமலையில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாத்துரை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார். கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன்! அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லியிருந்தால், கை தட்டியிருக்கலாம். உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்துவிட்டேன். விலைவாசியைக் குறைத்துவிட்டேன். நதிகளை இணைத்துவிட்டேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கைதினைத் தடுத்துவிட்டேன். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்திவிட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம்.

ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே! தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே! பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதற்கு பதில் சொல்லவில்லை! அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தவர்கள், அது நியூஸ் டைம்-ஆ? இல்லை, காமெடி டைம்-ஆ? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார்கள்! ஏன் என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் – தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்… பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!

மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே… உங்களுக்குத் தெரியாதுதானே? டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்தார்களே… அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே… அதுவும் உங்களுக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் I.T. – E.D. – C.B.I. இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது! நாங்கள் நம்பிவிட்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால் – நாளைக்கு உங்களுக்கும் – குஜராத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்! அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் – 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொல்லவில்லை! கேட்ட நிதியையும் தரவில்லை!

ஆனால் என்ன சொன்னார் தெரியுமா? “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னிடம் பிரதமர் மோடி சொன்னார். சொன்னபடி, நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார், நிதி வரவில்லை! நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட்கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார்.

அவரின் பேச்சுகளைப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அம்மையார் நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச்சைப்படுத்தினார் அந்த அம்மையார்!

ஆணவச் சிந்தனை கொண்ட அவர்கள் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார்கள். அது முதலில் ஒன்றிய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது! ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழ்நாட்டுக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழ்நாடு அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன்…

பொதுவாக A.D.B. – K.F.W. மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழ்நாடு அரசு கடன் வாங்கினால் – அந்தப் பணம் முதலில் ஒன்றிய அரசின் கணக்கிற்கு வந்துதான் மாநில அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும்! அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி ஒன்றிய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை ஒன்றிய அரசு கொடுத்ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும் – பொருந்தச் சொல்லுங்கள் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே… ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லாமல் – உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள்…

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்!”

ஒன்றிய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு… மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்…

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை… டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை… இராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை! இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம்! எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள்.. நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது… ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள் நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன்… நாங்கள் கேட்கும் நிதி, N.D.R.F. என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே… அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய S.D.R.F. என்ற மாநிலப் பேரிடர் நிதி! கரகாட்டக்காரன் படத்தில் வருமே… வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது! நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக்கிறது. அதையெல்லாம் அம்மையார் கொஞ்சம் படிக்க வேண்டும்… அதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து, ஏகடியம் – நக்கல் – நையாண்டி – கிண்டல் – கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது… பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை!

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் – சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் தேர்தல்! மதவாதத்திற்கும் – மதச்சார்பின்மைக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. இழைக்கும் சமூக அநீதிக்கும் – சமூக நீதிக்கும் நடக்கும் தேர்தல்! பா.ஜ.க. தலைமையிலான சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கும் – ’இந்தியா’ என்ற கொள்கைக் கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! வெறுப்பாட்சியை அகற்றி, நல்லாட்சியை அமைக்கவுள்ள தேர்தல்! அதை மனதில் வைத்துதான், சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்…

பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!

ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் – வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்திக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்!

ஆரணி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்கப்படும்!

நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருக்கும் திண்டிவனம் முதல் நகரி வரையிலான இரயில் பாதைத் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!

நெல், அரிசி வியாபாரிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்!

பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் திருவண்ணாமலை – திருக்கோவிலூர் – மாம்பழப்பட்டு – விழுப்புரம் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த தினசரி இரயில் பொதுமக்களுக்காக மீண்டும் இயக்கப்படும்!

இப்படி வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம் என்றால், தி.மு.க. என்றாலே, “சொன்னதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்!”

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தேன். அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி, ஒவ்வொரு மேடையிலும் அதைப் பட்டியலிட்டு வருகிறேன். சாதனைகளை முழுமையாக எடுத்துச் சொன்னால், அனைத்துக் கூட்டங்களும், “சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களாக” ஆகிவிடும். அதனால், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளால் பயனடைந்தவர்கள் பற்றிச் சொல்கிறேன்.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் இருக்கும் நடுபடுகை என்ற ஒரு இடம்! இரண்டு ஆற்றுக்கு நடுவில் இருக்கும் அந்தப் படுகையில் 35 குடும்பங்கள்தான் வசிக்கிறார்கள். ஆற்றைக் கடந்து சென்று பட்டீஸ்வரம் அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார். அந்த ஆயிரம் ரூபாய், படிப்பதற்குப் பயன்படுவது மட்டுமல்ல, படிக்கும்போதே சம்பாதிப்பது போன்று, தனக்குத் தன்னம்பிக்கை பிறப்பதாகவும் சொல்லியிருக்கிறார். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகளான அவருக்கு மனதில் உருவாகும் தன்னம்பிக்கைதான், நாம் சொல்லும் விடியல்! இப்படிப்பட்ட திட்டங்களாக பார்த்துப் பார்த்து உதவிக் கொண்டு இருக்கிறோம்!

பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தை, தொடங்குவதற்குக் காரணம், மதிய சாப்பாடு கொடுத்தாலாவது, பள்ளிகளுக்குப் பிள்ளைகள் படிக்க வருவார்கள் என்று நிறைவேற்றினார்! நானும் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு செல்லும்போது, எதார்த்தமாக, “காலை உணவு சாப்பிட்டீர்களா?” என்று ஒரு மாணவியிடம் கேட்டபோது, அப்பா-அம்மா வேலைக்குச் செல்வதால் – உணவு செய்யவில்லை என்று சொன்ன உடன், அதிகாரிகளை அழைத்து, எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை.

நம்முடைய குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகப் படிக்கக் காலை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும். ஃபைல் தயார் செய்யுங்கள் என்று சொல்லிக் கையெழுத்து போட்ட கைதான் இந்த ஸ்டாலினுடைய கை. இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் தினமும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்! இப்போது இந்தத் திட்டம் கனடா நாட்டிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, ”நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்-இல், இலவசமாக பயணம் செய்கிறோம்” என்று சொல்லும் விடியல் பயணம் திட்டம்!

வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’!

மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்போகும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!

இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத் தரும், ”நான் முதல்வன்” திட்டம்!

கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும், கோடிக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டுச் சீர் இருக்கிறது என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையோடும், பாசத்தோடும் சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

இப்படி, பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் வரை, பயன்பெறும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். இந்தத் திட்டங்களால் ஒவ்வொரு மகளிரும் – ஒவ்வொரு மாணவியும் – ஒவ்வொரு மாணவனும் – ஏன், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் உங்கள் முன் நிற்கிறேன்! அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்!

ஆன்மீகத்தின் முக்கியமான அடையாளமாக இருக்கும் நகரங்களில் ஒன்று, இந்தத் திருவண்ணாமலை! “எல்லார்க்கும் எல்லாம்” என்று அனைத்து மக்களுக்குமான அரசாக, நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது ஆன்மீகக் கோயில்கள் முறையாகச் செயல்படுவதற்காக ‘இந்து சமய அறநிலையத் துறையை‘ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியதே, நீதிக்கட்சி ஆட்சிதான். அனைத்துத் துறையும் வளர்வதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று முழங்கி, திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!

‘திராவிடம்’ என்ற சொல் யாருக்கெல்லாம் பயத்தைக் கொடுக்கிறதோ – யாருக்கெல்லாம் பிடிக்காதோ – அவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல! கலைஞர் பாணியில் சொன்னால் “கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது!” என்பதே எங்கள் எண்ணம்! மொத்தத்தில், மதங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்!

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அதிகமாகக் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் எது தெரியுமா? இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் விழாக்கள்தான். அந்த அளவுக்கு ஏராளமான பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறோம்.

என்ன பணிகள் செய்யப்படிருக்கிறது என்று ஒரு சிறிய பட்டியல் போட வேண்டும் என்றால், 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டிருக்கிறோம். 1500 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்திருக்கிறோம். கிராமப்புறக் கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ஆண்டுக்கு 1250 கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கி இருக்கிறோம். கோயில் திருப்பணிகளுக்கு வழிகாட்ட ‘வல்லுநர் குழுவை’ அமைத்திருக்கிறோம். பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரமாண்டு பழமையான 112 கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் குளங்களைச் சீரமைத்திருக்கிறோம். இறைவனுடைய கோயிலில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்’ என்ற சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அதனால்தான் பக்தர்கள் போற்றும் அரசாகவும் – அற்பர்கள் கதறும் அரசாகவும் – நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது! ஆன்மீகப் பெரியவர்கள் – மடாதிபதிகள் போற்றிப் பாராட்டும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மக்களைப் பண்படுத்தத்தான் ஆன்மீகத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர – பா.ஜ.க. போன்று மக்களைப் பிளவுபடுத்தப் பயன்படுத்தக் கூடாது. ஃபோட்டோஷாப்பில் கட்டமைக்கப்பட்ட ’குஜராத் மாடல்’ அம்பலப்பட்டு இன்றைக்கு திராவிட மாடல் என்பது இந்தியாவின் குரலாக மாறியிருக்கிறது! இந்த நிலையில்தான், கள்ளக்கூட்டணிகள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்ய வந்திருக்கிறது!

நடப்பது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியா கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம்! ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல் – யார் ஆளக் கூடாது என்று சொல்லாமல் – யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல் – எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் – கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்திற்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

ஒரு பக்கம் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொல்வார்; மற்றொரு பக்கம் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது – அது கூட்டணி தர்மம் என்று சொல்வார்! ஆளுங்கட்சியாக இருந்தால் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு, ”எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக எதிர்க்கிறார்கள்” என்று சொல்வார். எதிர்க்கட்சியாக மக்களால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, “எதிர்க்கட்சி ஏன் எதிர்க்க வேண்டும்?” என்று அரசியல் தத்துவமேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப் புது தத்துவங்களாகப் புலம்புவார். இப்படிப்பட்ட பழனிசாமி தமிழ்நாட்டிற்கு மட்டும் துரோகம் செய்தவர் இல்லை… தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்தியவர்!

அவரின் ஃபிளாஷ்பேக் என்ன? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா? அம்மையார் ஜெயலலிதா மறைந்த பிறகு, பழனிசாமி முதலில் சசிகலா அணியில் இருந்தார்! அம்மையார் சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்தபோது, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று ஒரு காமெடி செய்தார். இந்த நிலைமையில் அம்மையார் சசிகலா சிறைக்குப்போக, அந்த அம்மையார் கால் நோக்கி ஊர்ந்து, தவழ்ந்து கூவத்தூர் கவனிப்புகளால் முதலமைச்சரானார் பழனிசாமி!

உடனே, டி.டி.வி.தினகரனுக்கு வாக்கு கேட்டுச் சென்றார். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆனது! “கட் பண்ணா” பன்னீர்செல்வம்கூட கூட்டணி சேர்ந்து, அதே தினகரனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அடுத்து, பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்திற்கு வாட்டர் பாட்டில் மரியாதை செய்தார். இப்படி ஒரு மெகா சீரியல் எடுக்கும் கதைபோன்று குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான், பழனிசாமியின் கதை!

இப்போது, பிரிந்து போனவர்கள் பா.ஜ.க.வுடன் நேரடி கூட்டணியாகவும், பழனிசாமி – கள்ளக்கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள்! இப்போது, இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் – ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி!

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு துணைநிற்கப் போகும் இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்! அதற்குத் திருவண்ணாமலை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கும் – ஆரணி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கும் – உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் உங்களையெல்லாம் நான் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழர்கள், பா.ஜ.க. போன்று, அடக்கப் பார்ப்பவர்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்! அ.தி.மு.க. போன்று, அடிமையாக இருப்பவர்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்! என்று கடந்த இரண்டு தேர்தலில் நிரூபித்தது போன்றே, இந்தத் தேர்தலிலும் காட்ட வேண்டும்! மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்… நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவைக் காப்பாற்றும்! தமிழ்நாட்டைக் காப்பாற்றும்! எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும்! பாசிசத்தை வீழ்த்த – இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின் சூளுரை: I.N.D.I.A. கூட்டணியை வெற்றியை கலைஞர் நூற்றாண்டு பரிசாக வழங்குவோம்…!

திருவண்ணாமலையில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாத்துரை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அதில், தீபஒளி தரும் திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன்! நூற்றாண்டைக் கண்ட திருவண்ணாமலை நகராட்சியை “திருவண்ணாமலை மாநகராட்சி”-ஆக மாற்றிய உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன். பட்டுக்கும், அரிசிக்கும் பெயர் பெற்ற ஆரணிக்கு வந்திருக்கிறேன். இங்கு நடப்பது, எழுச்சிமிகு கூட்டம் என்று சொல்லவா! மாநாடு என்று சொல்லவா! அதையும் தாண்டி மாநில மாநாடு என்று சொல்லவா! திருவண்ணாமலையில் கடல் புகுந்துவிட்டது என்று சொல்லவா… என்பதைப்போல் கூடியிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

என்னையும் – உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ! அதேபோன்று, தி.மு.க.வையும் – திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. தி.மு.க.வுக்கு, திருவண்ணாமலை என்றாலே வெற்றிதான். முதன்முதலாக, தி.மு.க. 1957 தேர்தலில் போட்டியிட்டபோது, 15 பேர் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களில் நூற்றாண்டு காணும், ப.உ.சண்முகம் உள்ளிட்ட ஆற்றல்மிகு உறுப்பினர்களைத் தந்த மண் இது!

நாடாளுமன்றத்திற்குள் நாம் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது, இரண்டு எம்.பி.க்கள் அதில் ஒருவரான, இரா.தர்மலிங்கம் அவர்களைத் தந்த மண் இது! இவர்களை மட்டுமல்ல, பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை தொடங்கி… இன்று எதிலும் வல்லவராக விளங்கும் நம்முடைய எ.வ.வேலு உள்ளிட்ட எண்ணற்ற தளகர்த்தர்களைத் தந்துள்ள மண், இந்தத் திருவண்ணாமலை மண்! அதேபோல், தி.மு.க. வளர்ச்சியில், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பகுதி மக்கள் உற்றத் துணையாக இருந்திருக்கிறார்கள்.

திமுகவுக்கும் திருவண்ணாமலைக்கான தொடர்பை நான் சொல்ல வேண்டும் என்றால், 1965 மொழிப்போருக்கு வித்திட்ட 1957-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடந்த இடம்! 1967 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக இருந்த 1963 இடைத்தேர்தல் வெற்றி கிடைத்த இடம்! 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணம் தொடங்கிய இடம் என்று, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், தி.மு.க.வும் – திருவண்ணாமலையும் சேர்ந்தே இருக்கும்! இப்போது இந்தியா கூட்டணி நாட்டினை ஆளப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் கட்டியம் கூறப்போகிறது!

திருவண்ணாமலை தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் சி.என்.அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இந்தப் பெயரே போதும் வெற்றிக்கு! 1987-ஆம் ஆண்டு முதல் இளைஞரணியில் கட்சிப் பணி தொடங்கி, என்னுடைய தலைமையிலான இளைஞர் அணியில் அமைப்பாளராக இருந்தவர். தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்திருக்கும் இவரை, சென்ற தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில், வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், ஆரணி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிடுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து – கழகப் பணியையும், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்து – மக்கள் பணியையும் சிறப்பாகச் செய்த இவரின் குரல், ஆரணியின் குரலாக டெல்லியில் ஒலிக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக – உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்க வேண்டும்.

நான் எல்லாக் கூட்டங்களிலும் சொல்வது போன்று, இந்த தேர்தல்களம், இரண்டாவது விடுதலை போராட்டம்! இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், பேரறிஞர் அண்ணா சொன்னதைத்தான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அண்ணா சொல்லுவார்: “இந்த உலகத்தில் எங்களுக்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று, எங்கள் மனச்சாட்சி! இரண்டு, இந்த நாட்டு மக்கள்!” இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மக்களுக்காக மனச்சாட்சிப்படி நல்லாட்சி நடத்துபவன்!

தமிழ்நாட்டைப்போலவே, தில்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க – ஜனநாயகச் சக்திகளும் – இந்திய நாட்டு மக்களும் – களம் கண்டுள்ள இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்! இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது!

நம் தமிழ்நாட்டை மதிக்கும் – நம் அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றும் – நம் இனத்தை – இனத்தின் பண்பாட்டை மதிக்கும் – எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் வேண்டும். அப்படிப்பட்ட பிரதமரைத்தான், இந்தியா கூட்டணி நிச்சயம் வழங்கும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் – ஜனநாயகத்தை – தமிழ்நாட்டை – நாட்டின் எதிர்காலத்தை – இளைஞர்களை – மகளிரை – எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்கும்!

இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும்! ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்! வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும்! எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும்! அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்! நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும்! அதற்கு முதலில், பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! ஏன் என்றால், ”பா.ஜ.க. ஆண்டதும் போதும் – மக்கள் மாண்டதும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட்டார்கள்.

இந்த நல்ல செய்தி, திருவண்ணாமலையில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல – தென்மாநிலங்களில் மட்டுமல்ல – வடமாநிலங்களில் இருந்தும் – ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது! இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்திருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது பொய்யையும், புரளியையும் கிளப்பி – மக்களைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்குறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரியும்!

அதனால்தான், இப்போது பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் I.T. துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்! அதேபோல், E.D.யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார்… E.D. – I.T. – C.B.I. – இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது R.T.I.யையும் கூட்டணியில் சேர்த்திருக்கிறார். இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால் – R.T.I. பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கிறார். மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது.

மோடி அவர்களே… இது ஏப்ரல்தான்! இன்னும் மே மாதம் இருக்கிறது… ஜூன் மாதம் இருக்கிறது… உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ஆம் தேதி தெளிந்துவிடும்! பா.ஜ.க. எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டிற்கு விடுதலை கிடைத்துவிடும்! ஜூன் 3 – நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு! ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள்! நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர், தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ – எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ – ”மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!” என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ – அவற்றைப் பாதுகாக்கும் இந்தியா கூட்டணியின் வெற்றியை, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டுக்கு ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி வராரு..! யாரு மோடி…!

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதல் விடுதலை போர் தொடங்கிய வேலூருக்கு வந்துள்ளேன். ஜனநாயகத்தை காக்க இரண்டாம் விடுதலை போராட்டத்துக்கு வந்துள்ளேன்.

தமிழ்நாட்டுக்கு ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி வராரு..! யாரு மோடி…! பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தேர்தலுக்காக வருகிறார். வெள்ளம் வந்தால் வரமாட்டார். நிதி கேட்டால் தரமாட்டார். சிறப்பு திட்டம் கேட்டால் கொடுக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழ்நாடு பக்கம் அவர் வரமாட்டார்.

அதிமுக அதிகாரத்தில் இருந்தபோது சிறுபான்மையினர்களின் முதுகில் குத்தியது. இப்போது பாஜகவுடன் கள்ளக்கூட்டணி அமைத்து சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவதுபோல் பழனிசாமி நாடகம் ஆடுகிறார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும். பழைய சம்பவங்கள், பொய்யான கதைகள் சொல்லி அதன் மூலம் மக்களை குழப்பி தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என முயற்சி செய்கிறார். அதற்குத்தான் இப்போது கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார். இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை இப்போது பேசுகிறார்கள்.

இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன் கூட்டில் கை வைத்ததுபோல் பாஜக முழிக்கிறது. கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்பதாக சொல்லவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ முறை இலங்கைக்கு பயணம் செய்த மோடி ஒருமுறையாவது கச்சத்தீவை திரும்ப கேட்டாரா? இலங்கை அதிபரை சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்று சொல்லவில்லையே. அப்போதெல்லாம் மோடிக்கு கச்சத்தீவு ஞாபகம் இல்லை.

நேரு, இந்திரா காந்தி காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘‘ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தரவேண்டும், நீட் விலக்கு அளிக்க வேண்டும்’’ என பல கோரிக்கைகளை வைத்தேன். அதில் முதல் கோரிக்கையாக, ‘‘கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கை மனுவைக்கூட படித்தீர்களா?

ஆர்டிஐ விண்ணப்பம் போட்ட நான்கு நாளில் எப்படி பதில் வருகிறது. இரண்டாவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2015-ல் துறை செயலராக இருந்தபோது கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இல்லை என்று தகவல் கொடுத்தார். இப்போது, தேர்தல் வருவதால் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தகவலை மாற்றி கொடுக்கிறார். மூன்றாவதாக கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது உரிய பதில் அளிக்கவில்லை.

எத்தனையோ பேர் ஆர்டிஐ விண்ணப்பம் அளித்தபோது தெளிவான பதில் கொடுக்கவில்லை. உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதாக பதில் சொன்ன பாஜக அரசு, ஆர்டிஐ மூலம் எப்படி தவறான தகவல் தந்தார்கள்? பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு வெளியுறவுத் துறை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கொடுத்துள்ளனர். நான்காவதாக கச்சத்தீவுக்காக திடீர் கண்ணீர் வடிக்கும் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு நடந்தபோது இலங்கையை கண்டித்தாரா.

சீனா குறித்து மோடி வாய் திறந்தாரா? அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி 30-க்கும் மேற்பட்ட இடங்ளுக்கு சீன மொழியில் பெயர்கள் வெளியிட்டுள்ளனர். அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள். இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லாத நிலையில், கச்சத்தீவு பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்தியா மட்டுமல்ல கனடாவிலும் காலை உணவு திட்டம் தொடங்கியிருப்பதை பார்த்தேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் வாக்குறுதி தராவிட்டாலும் இத்திட்டத்துக்கு கையெழுத்திட்டேன். இன்று தமிழகம் முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவை வயிறார சாப்பிடுகின்றனர். 1.16 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். இது ஸ்டாலின் தரும் தாய்வீட்டு சீதனம் என்கின்றனர். இதுதவிர, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்: பதில் சொல்லுங்கள் மோடி..!

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானதாகவும், சமமானதாகவும் கருதப்படும் என்று நான் நம்புகிறேன். அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம், கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்து வந்த மீன்பிடித்தல், புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உரிமைகள் எதிர்காலத்துக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன’” என்று தெரிவித்த, இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடை செய்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சத்தீவு இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதுடன், ‘இலங்கையின் இந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் பல பாஜகவினர் திமுக – காங்கிரஸ் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகி, “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…” எனப் பதிவிட்டுள்ளார்.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை..!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒரு பக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் போராட்டம்: “நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்..!”

மத்திய இடைக்கால பட்ஜெட்டை 2024 பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு வஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்து அளித்துள்ளார் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஆர் பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு திமுக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.,க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் இந்தியா கூட்டணி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு நேற்று எழுதியுள்ளார். அதில், பத்தாண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, நியமன பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகார போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மிக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியை தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு.

அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாக பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-ல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றுவதை காண்கிறேன்.

அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள திமுக முதன்மை செயலாளர் – மாநாடுகளை சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான கே.என்.நேருவும், சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது.

எனினும், இளைஞரணியின் 25-ம் ஆண்டினையொட்டி 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்று பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வருகிறது.

ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்த பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாக கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்பு கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டல்

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் கட்டிடங்களை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது என்றும், உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன் என கூறினார்.

கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தீரன் சின்னமலை பெயரைச் சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது. திருப்பூரில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே உயர் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், திரும்பிய பக்கமெல்லாம் கல்லூரிகள் உள்ளதால், வீட்டிற்கொரு பட்டதாரி உள்ளனர். தமிழ்நாடு மாணவர்கள் உலகெங்கும் சென்று சாதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இங்கு புதிதாக கட்டப்படவுள்ள தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைதொடர்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.42 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வணிகவரி துறையின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், வணிகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

இதில் பெரும்பான்மை வழக்குகள் தமிழ்நாடு வணிகவரி சட்டம், மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் நிலுவையில் உள்ளவை. இந்த சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஏற்கெனவே வழக்கில் இருந்த வரிச்சட்டங்களின்கீழ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன.

நிலுவையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு முடிவு காண வணிகர்கள் நீண்ட நாளாக முன்வருகின்றனர். இதைகவனமாக பரிசீலித்து, நிலுவை தொகையை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோல கடந்த காலங்களில் பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50 ஆயிரத்துக்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அரசின் இந்த முடிவால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடியால் பயனடைவார்கள். இவர்களை தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த 4 வரம்புகளில், முதலில் உள்ளவர்கள் மொத்த நிலுவையில் 20 சதவீதம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி, அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி, வழக்கில் இருந்து வெளிவரலாம். இதர 3 வரம்புகளில் உள்ள வணிகர்கள் நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டினால் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவை தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரைஅவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இந்த சமாதான திட்டம் அக்.16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 4 மாதங்களுக்கு, அதாவது 2024 பிப்.15-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசின் முயற்சியை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். நேற்றே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.