FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் ஷகீரா மற்றும் நைஜீரியாவின் பர்னா பாய் ஆகியோரின் அதிரடி இசையுடன் மெக்சிகோவில் கோலாகலமாகத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் செய்த தவறான பாஸை பயன்படுத்தி மெக்சிகோவின் ஜூலியன் குய்னோனஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 2-வது பாதியில் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. 50-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் யா யா சிதோலே முரட்டுத்தனமான ஆட்டத்தால் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்திய மெக்சிகோவின் நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ், 67-வது நிமிடத்தில் தலையால் முட்டி ஒரு அபாரமான கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவின் தெம்பா ஸ்வானே ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் தென் ஆப்பிரிக்கா 9 வீரர்களுடன் விளையாடியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மெக்சிகோ கேப்டன் சீசர் மாண்டெஸும் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார். உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் 3 ரெட் கார்டுகள் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி 3 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.