தெலங்கானாவின் சித்திப்பேட்டைச் சேர்ந்த அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வேலை செய்துவந்த பானு சந்தர் ரெட்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீபி ஷாஜியா சிராஜ் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு AI காரணமாக ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலை இழந்தார். அதனால் இந்தியா வந்தவர் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டு இருந்தார். இதற்கிடையில், பீபி ஷாஜியா சிராஜுக்கு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-ல் வேலை கிடைத்தது. அதனால், இந்த தம்பதி 8 மாதங்களுக்கு பெங்களூரின் கோத்தனூர் பகுதியில் குடியேறியது.
இந்நிலையில், பீபி ஷாஜியா சிராஜ் சில தினங்களுக்கு முன்பு ஹைதரபாத் சென்று இருந்தார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் பெங்களூரு திரும்பி இருக்கிறார். வீட்டுக் கதவை தட்டியபோது கதவு திறக்கவே இல்லை. இதனால் பதற்றமடைந்த பீபி ஷாஜியா சிராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது பானு சந்தர் ரெட்டி மின்விசிறியில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். அதைத் தொடர்ந்து உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியது. சடலத்துடன் அறையில் தற்கொலை குறிப்பும் இருந்தது. அதில், பொருளாதார பிரச்னைகள், வேலை இல்லததால் ஏற்பட்ட விரக்தி, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சடத்துக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்த பீபி ஷாஜியா சிராஜ் சுமார் 20 நிமிடங்கள் அமர்ந்திருந்தவர், திடீரென அங்கிருந்து மாயமானர். அடுத்த சில நிமிடங்களில் 18-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.