விருதுநகர் மாவட்டம், மீசலூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சுப்புலட்சுமி, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகே தவெக தொண்டரணி சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விருதுநகர் தவெக எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு உணவு வழங்கும் காட்சிகள் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அந்த நிகழ்ச்சியில் சுப்புலட்சுமி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அன்னதானப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசு ஊழியர்கள் அரசியல் சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஆனால், நடிகரின் ரசிகையாக இருப்பது சுப்புலட்சுமி போன்றவர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், விஜய் தலைவராக இருக்கும் அரசியல் கட்சியின் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பங்கேற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது வேறு விவகாரம். அதனால்தான், அரசு ஊழியர் நடத்தை விதிகள் மீறப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சர்ச்சைக்கு காரணமாக இருப்பது, கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி பணி நேரத்திலேயே தவெக நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுவதுதான். அவர் பணி நேரத்தில் அரசியல் கட்சியின் நிகழ்வில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால், தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973-இன் Rule 14-ன் படி, அரசு ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடக்கூடாது.

அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் பங்கேற்பது, அரசியல் ஆதரவை வெளிப்படுத்துவது அல்லது அரசியல் சார்பை வெளிக்காட்டும் வகையில் நடந்து கொள்வது ஆகியவை ஒழுங்கு நடவடிக்கைக்குரிய விஷயங்களாகக் கருதப்படலாம். அரசு ஊழியர்கள் அரசியல் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அந்த விதியின் அடிப்படை நோக்கமாகும்.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் காரணமாக, மீசலூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி தொடர்பாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அல்லது வருவாய்த் துறை விளக்கம் அளிக்குமா? தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973-இன் Rule 14-ன் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.