அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு முறைப் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் எனப் பல காரணங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இவர்களுடன் துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் பெரும் பட்டாளமாக உடன் சென்றுள்ளனர். இந்நிலையில், விதிமுறைகளை மீறி வெளிநாடு சென்று திரும்பிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு கோட்டை வட்டாரத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அதற்கு மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாய விதியாகும். மேலும், இத்தகைய பயணங்களின் போது அவர்கள் Diplomatic Passport மூலமாகவே பயணிக்க வேண்டும்.
ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவருமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தாமல், தங்களுடைய சொந்த பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு சென்று வந்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும், நாட்டின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் டெல்லி தரப்பு கொதித்தெழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘ஷோ காஸ்’ நோட்டீஸ் இந்த விதிமீறலைக் கடுமையான குற்றச்சாட்டாகக் கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு அதிரடியாக ‘ஷோ காஸ்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்தத் தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர்களுடன் சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களும் மத்திய அரசின் அனுமதியைப் பெறத் தவறியதால், அவர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.