தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள “தமிழ்நாடு அரசு” என்ற வார்த்தையே எழுத்துப் பிழையுடன் இருந்தது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சியிலேயே அரங்கேறியுள்ள ஒரு சொதப்பல், தற்போது மாநிலம் தழுவிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ தொடக்க விழா நடைபெற்றது.

அந்த விழாவில் அரசுத் தரப்பில் ஒளிபரப்பப்பட்ட பிரத்யேக ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த அடுத்தடுத்த எழுத்துப் பிழைகள் மற்றும் தமிழ் வார்த்தை தவறுகள் தவெக அரசுக்குத் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. ரூ.354 கோடி ஒதுக்கீட்டில், 2,500 புதிய பணியிடங்களுடன் தொடங்கப்பட்ட இந்த மெகா திட்டத்தின் தொடக்க விழாவில், ஒரு ஏஐ வீடியோ தயார் செய்யப்பட்டு எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளில் இருந்த வார்த்தைகளில் பல இடங்களில் எழுத்துப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக தமிழக அரசின் இலச்சினையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும் உள்ளிட்ட வார்த்தைகளிலேயே எழுத்துப் பிழை இருந்தது. அதேபோல் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என்ற வார்த்தையிலும் எழுத்துப் பிழை இருந்தது. இன்னும் சொல்லப் போனால், அது தமிழ் எழுத்து தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தவெக அரசின் முதல் அரசு விழாவிலேயே, அதுவும் முதலமைச்சர் கலந்துகொண்ட மேடையிலேயே இத்தனை தமிழ்ப் பிழைகளுடன் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எப்படி என்று எதிர்க்கட்சிகள் உடனே போர்க்கொடி தூக்கியுள்ளன.