தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. தவெக 108 இடங்கலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும் மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக் கட்சிக்கே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெறவேண்டும். தவெக 108 இடங்களில் வென்றுள்ளது. இதில் விஜய் வென்ற ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் மேலும் சபாநாயகருக்கு ஒரு தொகுதி . இதையடுத்து 106 சீட்கள் தவெக கைவசம் இருக்கும். கூடுதலாக 12 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நிலையில், தமிழக அரசியலின் ‘கிங் மேக்கராக’ சிறு கட்சிகள் உருவெடுத்துள்ளன.
எனவே, வரும் நாட்களில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் 5 விசிக 2 சிபிஐஎம் 2 சிபிஐ 2 மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 கட்சிகள் ஆதரவளித்தால் floor test-ல் வெற்றி பெற முடியும். எனவே, வரும் நாட்களில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இத்தனை சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைப்பது, ஒரு நிலையான அரசாங்கத்தைத் தருமா என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். இந்த இக்கட்டான நிலையில்தான், விஜய் ஒரு பெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைப் பெற காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ள சூழலிலும், விஜய் காங்கிரஸைத் திட்டமிட்டே தள்ளி வைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் இந்த நகர்வுக்குப் பின்னால் ஒரு தீர்க்கமான அரசியல் கணக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தவெக-விற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம். குறிப்பாக, நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு மாநிலத் திட்டங்களுக்குப் பிரதமரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸுடன் கைகோர்ப்பது பாஜகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என விஜய் கருதுவதாகத் தெரிகிறது.
காங்கிரஸைப் புறக்கணிப்பதன் மூலம், தாங்கள் ஒரு ‘நடுநிலை’ சக்தியாகவும், தேவையெனில் மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாகவும் விஜய் ஒரு மறைமுகச் செய்தியை டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் பாமக மற்றும் சிறு கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மெஜாரிட்டியை நிரூபிப்பாரா? அல்லது அதிமுக கூட்டணியின் மறைமுக ஆதரவு அவருக்குக் கிடைக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தமிழக அரசியல் களம் இப்போது ஒரு பெரும் சதுரங்க ஆட்டத்தைப் போல மாறியுள்ளது.