திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அரசு ஊழியர் இணைந்து, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயத்திற்காக ‘‘வாட்ஸ்அப் குரூப்’ ஒன்று உருவாக்கியுள்ளனர்.
இந்த குரூப்பில் பெண்கள் குறித்த அவதூறான ஆபாச வீடியோ ஒன்று பரவியதாக கூறப்படுகிறது. இது அந்த குரூப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் காமினி, ஆபாச வீடியோவை பரப்பியவர் யார் என விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவை குரூப்பில் ஷேர் செய்தது சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தாமரை கண்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தாமரை கண்ணன் அவர்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் காமினி அதிரடி உத்தரவிட்டார்.