தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே +1 மாணவி தங்கள் வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் எப்போதும் மிகவும் பாசமாக விளையாடும்போது எதிர்பாராத விதமாக அந்த நாயின் நகம் பட்டதில் மாணவிக்கு ரேபிஸ் விஷம் உடல் முழுவதும் பரவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த ரெடிமேட் பின்னலாடைத் தொழில் செய்து வரும் செல்வகுமார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், செல்வ சுஹாசினி என்ற மகளும் உள்ளனர். செல்வ சுஹாசினி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வந்துள்ளார். செல்வகுமாரின் குடும்பத்தினர் தங்களது வீட்டில் செல்லப் பிராணியான ஒரு நாயை வளர்த்து வந்தனர். அந்த நாயுடன் மாணவி செல்வ சுஹாசினி எப்போதும் மிகவும் பாசமாக விளையாடுவது வழக்கமாம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் அந்த நாயுடன் செல்வ சுஹாசினி விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாயின் நகம் பட்டதில் மாணவிக்குக் காயம் அல்லது கீறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு சாதாரணக் காயம் என்று கருதியதால், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் மாணவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி செல்வ சுஹாசினிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்ததன் மூலம் விஷம் (Rabies) உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, செல்வ சுஹாசினி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் மரணத்தால் நிலைகுலைந்த பெற்றோர், அந்த அதிர்ச்சியில் உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தத்தனேரி மயானத்தில் மாணவியின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது இந்தச் சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக நாய் மற்றும் பூனை அவை கடித்தாலோ அல்லது நகக்கீறல் பட்டாலோ அலட்சியம் காட்டாமல் முறையான சிகிச்சை பெறுவது எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. ஒரு பள்ளி மாணவி வளர்ப்பு நாய் கடித்தே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.