விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்கு பலியாகிவிட்டனர். பிசிசிஐ-க்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கார்சன் காவ்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களும், நட்சத்திர வீரர்களுமான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்தனர். அவர்களது இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கர்சான் தேவ்ஜிபாய் காவ்ரி வி.கே.லால்வானி ஷோவில் பேசுகையில், விராட் கோலியின் திடீர் ஓய்வு ஒரு மர்மம். அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தொடர்ந்து விளையாடி இருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெறச் செய்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, அவர் ஓய்வு பெற்றபோது பிசிசிஐ அவருக்கு முறையான பிரியாவிடை அளிக்கவில்லை. பிசிசிஐ-க்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் இவ்வளவு சேவை செய்த ஒரு மகத்தான வீரருக்கு சிறப்பான பிரியாவிடை வழங்கியிருக்க வேண்டும். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்திய அணி நிர்வாகத்தின் உள்நாட்டு அரசியலுக்கு பலியாகிவிட்டனர்.
பிசிசிஐ-க்குள் நடக்கும் உள்நாட்டு அரசியல் புரிந்து கொள்ள முடியாதது. இதுவே விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக இருக்கலாம். ரோகித் சர்மாவும் முன்கூட்டியே ஓய்வு பெற்றார். அவர்கள் வெளியேறும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் தானாக வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினார்கள்.ஆனால், தேர்வுக் குழுவுக்கும், பிசிசிஐ-க்கும் வெவ்வேறு திட்டங்கள் இருந்தன. இது ஒருவித அற்ப அரசியல் என கர்சான் தேவ்ஜிபாய் காவ்ரி தெரிவித்தார்.