ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண், கடையில் 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரஷர் குக்கரை ரூ.1,755 திற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தி வாங்கியுள்ளார். குக்கரை வாங்கிய அன்றைய தினமே, அதில் அரிசி சமைக்க முயன்றுள்ளார்.. 3 முதல் 4 விசில் வந்துள்ளது. பிறகு, குக்கரை திறந்து பார்த்தால், அரிசி முழுமையாக வேகவில்லை. மறுநாளும் பருப்பு சமைத்து பார்த்துள்ளார். அப்போதும் பருப்பு சரியாக வேகவில்லை.
இதனால் குக்கரை வாங்கிய கடைக்கு போனை போட்டு, அரிசி, பருப்பு இரண்டுமே வேகவில்லையே? என்று பிரச்சனையை சொல்லியிருக்கிறார். ஆனால், கடை ஊழியர்கள் அவருக்கு உதவாமல், சர்வீஸ் சென்டருக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், வயது முதிர்வு காரணமாக தன்னால் அங்கு போக முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு கடை ஊழியர்களே குக்கரை பெற்று சென்று பரிசோதித்துள்ளனர். குக்கர் சரியாக வேலை செய்கிறதே என்று பதிலளித்துள்ளனர். ஆனால், அவர்கள் சொல்வதை அந்த பெண் ஏற்கவில்லை. இந்த குக்கருக்கு பதிலாக புதிய குக்கரை மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். இதனிடையே, குக்கர் தயாரிப்பு நிறுவனமும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, “டீலரிடம் குக்கரை மாற்றிக் கொடுக்கும்படி தெரிவித்துள்ளோம், புது குக்கரை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், கடை மற்றும் டீலர் தரப்பினரோ, இதை ஏற்கவில்லை.. “குக்கரில் எந்த குறையும் இல்லை, அந்த பெண் எங்களை மிரட்டுகிறார். நாங்கள் அந்த குக்கரை சர்வீஸ் சென்டரில் வைத்து செக் செய்தோம். நன்றாக குக்கர் வேலை செய்கிறது, புது குக்கரை தர முடியாது” என்று கூறி, அதனை வீடியோ எடுத்தும் காட்டியிருக்கிறார்கள்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் குட்லா தனுஜா மற்றும் உறுப்பினர்கள் வர்ரி கிருஷ்ணமூர்த்தி, ரஹீமுன்னிசா பேகம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 31-ந் தேதி இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “குக்கருக்கான வாரண்டி (Warranty) விதிமுறைகளைக் கடைக்காரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர். குக்கரில் எந்தக் குறையும் இல்லை என்றால், நல்லெண்ண அடிப்படையில் அதை மாற்றித் தருவதாக ஏன் முன்வந்தீர்கள்? நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, புகார்தாரருக்கு தனது பணத்தை திரும்ப பெற முழு உரிமை உள்ளது” என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், “நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார்தாரருக்குச் செல்வாக்கு இருப்பதாக கடைக்காரர்கள் சொன்னது, நீதிமன்றத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்; இது புகார் அளித்தவரை அவமதிப்பதாகும். கஸ்டமர்களுக்கு சரியான சேவை வழங்காததற்காகக் கடை, டீலர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகிய மூவரும் சேர்ந்து குக்கரின் விலையான 1,755 ரூபாயைத் திரும்பத் தர வேண்டும்.
அத்துடன், மன உளைச்சலுக்கு இழப்பீடாக 12,000 ரூபாயும், வழக்கு செலவாக 3,000 ரூபாயும் என மொத்தம் 16,755 ரூபாயை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும். இது தவிர, நீதிமன்றத்தின் மீது ஆதாரமற்ற அவதூறு பரப்பியதற்காக கடைக்காரர் மற்றும் டீலர் இருவரும் சேர்ந்து, அமராவதியில் உள்ள ஆந்திர மாநில சட்டப் பணிகள் ஆணையத்திற்கு 21,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்” என்று அதிரடி உத்தரவு பிறப்பித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.