தாத்தா சம்பாதித்த சொத்து பேரனுக்கு சொந்தம் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அப்படியெல்லாம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. பழைய படங்களில் ஒரு தாத்தாவுக்கு ஒரே ஒரு பேரன் இருப்பான். கடைசியில் பேரனின் முகத்தை பார்க்க தாத்தா உயிரை கையில் பிடித்து வைத்திருப்பார். அவர் இறந்த பின்னர் சொத்துக்கள் அனைத்தும் அப்படியே பேரனுக்கு போய்விடும். நம்மூரில் பெரிய மனிதர்கள், பஞ்சாயத்துக்களில் இதே கருத்தை சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இந்த கதை இனி நடக்காது.
சொத்து வழக்கு ஒன்று கடந்த 29 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுக்கடித்து வந்திருந்தது. தாத்தா சொத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக மனுதாரர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் மற்றும் சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிணற்றடியில் பேசப்படும் பஞ்சாயத்துகளின் பாயிண்டுகளை எடுத்து அடுக்கினார்.

எதிர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாயிண்ட்டை பிடித்து பேசியிருந்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் முக்கிய தீர்ப்பை கொடுத்தனர். தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு இருக்கிறது என்று இனி சொல்ல முடியாது. பேரனாக பிறந்துவிட்டாலே சொத்தில் பங்கு கிடைத்துவிடுமா? அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது. தாத்தா சம்பாதித்த சொத்தில் அவரது மனைவி, மகன்/மகளுக்கு மட்டுமே பங்கு இருக்கிறது.
ஒருவேளை மகன்/மகள் இல்லை. இறந்துவிட்டனர் எனில், மனைவி (பாட்டி) மற்றும் பேரனுக்கு உரிமை உண்டு. அதுவும் கூட தாத்தா உயிருடன் இருக்கும்போது உரிமை கோர முடியாது. உயில் எழுதி வைக்காமல் கண்ணை மூடிவிட்டார் எனில்.. வாரிசு என்கிற அடிப்படையில் இந்த உரிமை கிடைக்கும் என்று கூறியிருக்கின்றனர். மட்டுமல்லாது தாத்தா இந்த உலகத்தைவிட்டு போகும்போது, அவருடைய சொத்துக்கள் தானாக அவரது மனைவி மகன்/மகளுக்கு போய்விடும். தாத்தா போய் சேர்ந்துவிட்டாரே.. அவருடைய சொத்து அப்பாவுக்கு வந்திருக்கிறது..
அதில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று பேரன் வழக்கு தொடுக்க முடியாது. தாத்தா சொத்து அவரது மகனுக்கு வந்தால்.. அவரது மகன் அந்த சொத்தை தனது மகனுக்கு (பேரனுக்கு) எழுதி வைத்தால் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். ஒருவேளை தாத்தாவின் மகன், அந்த சொத்தை தனது மகளுக்கு மட்டுமே என்றும் எழுதி வைக்கலாம். அதேபோல அந்த சொத்தை விற்கவும் அவருக்கு முழு உரிமை உண்டு. அதில் பேரனுக்கு உரிமை கொண்டாட இடம் இல்லை.
இருப்பினும் தாத்தாவின் சொத்துக்கள் மகனுக்கு கை மாறி.. மகன் உயில் ஏதும் எழுதி வைக்காமல் கண்ணை மூடிவிட்டார் எனில், அப்போது அந்த சொத்து அவரது மனைவி, மகன்/மகளுக்கு தானாக உரிமையுடையதாக மாறிவிடும். எனவே இனி தாத்தா சொத்து பேரனுக்கு என்று கண்ணை மூடிக்கொண்டு இருக்காதீர்கள்.