சமீபகாலமாக பள்ளிகள், பணியிடங்கள், பயணங்கள் மற்றும் வீடுகள் என அனைத்து இடங்களிலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன. கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, கொடூரமாக தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்களின் எதிரொலியால் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்பாவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? என்றால் இல்லை. எந்த ஆண்களையும் நம்பி பேசக்கூடாது என்ற நிலைமைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர் 2 பெண் குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2-ஆம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், லாரி ஓட்டுநரின் 2-வது மனைவி மற்றும் மூத்த மகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் 15 வயதான இளைய மகளான மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது லாரி ஓட்டுநர் சிறுமியிடம் அத்துமீறி உள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியின் தாய், அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.