ஆத்தூரில் வீட்டுமனையை தனி பட்டாவாக மாற்றுவதற்கு 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்தனர். நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜீவிதா என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு நில அளவையர் (சர்வேயர்) ஆக பணியில் சேர்ந்தார். இவர் தப்போது ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆத்தூர் தாலுகா துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரேசன் என்பவர் தான் வீட்டுமனை வாங்கி இருப்பதாகவும், அந்த மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து தருமாறு நில அளவையர் ஜீவிதாவை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஜீவிதா தனது உதவியாளரை சந்திக்குமாறு கூறினாராம். அவரது உதவியாளர் கண்ணதாசன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வீட்டுமனை பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும் என்று கூறினாராம்.
இதற்காக முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உதவியாளர் தெரிவித்தாராம். அப்படியா என்று கேட்டுவிட்டு, பணம் ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பி குமரேசன் சென்றுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை தடவிய 10 ஆயிரம் நோட்டுகளை குமரேசனிடம் வழங்கினர்.
பணத்தை பெற்றுக்கொண்ட குமரேசன், நேற்று மாலை 6.30 மணி அளவில் நில அளவையர் ஜீவிதாவிடம் கொடுக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நில அளவையரின் உதவியாளர் கண்ணதாசன், ஜீவிதாவிடம் குமரேசனை அழைத்துச் சென்றார். பின்னர், ஜீவிதா பணத்தை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை, கையும் களவுமாக ஜீவிதாவை பிடித்தனர். மேலும், உதவியாளர் கண்ணதாசனையும் கைது செய்தனர். இதனால் ஆத்தூர் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.